உலக தற்கொலை தடுப்பு தினம்




உலக தற்கொலை தடுப்பு தினத்தை ஒட்டி உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #WorldSuicidePreventionDay #WHO 2018.

ஏழ்மை மற்றும் நடுத்தர வர்க்க நாடுகளில்தான் தற்கொலைகள் அதிகம் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக அழுத்தங்கள், ஏற்றத்தாழ்வுகளும் ஒருவரது தற்கொலைக்கு தூண்டுதலாக உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இன்று, செப்டம்பர் 10-ஆம் நாள். உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. முன்னோக்கியே நகர்கின்ற உங்கள் வாழ்க்கையை சற்றே பின் நோக்கியும் யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு தெரிந்த யாரையாவது தற்கொலையால் இழந்ததுண்டா? இல்லை என்றாலும், நாளிதழ்களிலும் செய்திகளிலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற விஷயத்தை அவ்வப்போதுகேட்டு வருந்தியதுண்டா?

இலங்கையில் வருடாந்தம் 3,000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர் என, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதுடன், கடந்த மூன்று வருடங்களுள், 2017 ஆம் ஆண்டில்  இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, சுகாதார ஊக்குவிப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு பெறப்பட்ட தகவலுக்கமைய, 2,586 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவும், இவர்களில் 677 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


இவ்வாறு தற்கொலை செய்துகொள்வோரில், 19 சதவீதமானோர் திருமண வாழ்வில் ஏற்பட்ட பிரச்சினைகளால் தற்கொலை செய்துகொண்டுள்ளதுடன், 11.6 சதவீதமானோர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் விரக்தியால் தற்கொலை செய்தவர்களாகவும் உள்ளனர். மேலும், 10 சதவீதமானோர் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாகவும், 35.18 சதவீதமானோர் அச்சுறுத்தல் காரணமாகவும் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


தற்கொலைகளை தடுக்க முடியுமா? எதனால் இந்தத் துயரச் சம்பவங்கள் ஏற்படுகின்றன? இந்த கேள்விகளை குறித்து சிந்திக்கவும், உங்களுடைய பங்கை எப்படி வெளிப்படுத்துவது என்று சொல்வதுமே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
உலகளவில் கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. 15 முதல் 45 வயது வரை ஏற்படும் உயிரிழப்புகளுக்கு தற்கொலை ஒரு முக்கிய காரணம். நம்முடைய பாட்டி, தாத்தாக்கள் பெரிய சுனாமியை எதிர்த்து நின்று ஜெயித்தபோது, வாழ்க்கையில் ஒரு சிறு அலை இன்றைய தலைமுறையினரை ஏன் அடித்துச் செல்கிறது? உளவியல் ரீதியாக இதை 'Resilience' என்கிறோம். ஒரு பந்தை தரையில் தட்டினால், அது மீண்டும் மேலே எழுவது போல் நாம் ஒவ்வொருவர் உள்ளிலும் சவால்களை சமாளிக்கும் தன்மை புதைந்து கிடக்கிறது.
  • நவீன உலகில் பறக்கும் நாம், கைபேசிகளையும், கணிணிகளையும் மட்டுமே உற்ற நண்பர்களாகப் பார்க்கிறோம். சந்தோஷமான தருணங்களை சமூக வலைத்தளங்களில் பகிரும் நாம், நம்முடைய துக்கங்களையும், ஏமாற்றங்களையும் பகிர முடிகிறதா? நான் அழுதால் சாய்வதற்கு தோளும் இல்லை. என் பிரச்சனைளை கேட்பதற்கு செவியும் இல்லை. 'Blue Whale Challenge", "Momo Challenge" என்று குழந்தைகளின் வாழ்வை கேள்விகுறியாக்கும் சவால்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
தன் குழந்தைகளுக்கு இல்லை என்ற சொல்லே இருக்கக் கூடாது என்று பார்த்து, பார்த்து வளர்க்கும் பெற்றோர், அவர்களுக்கு எதிர்காலத்தில் சமூகத்தில் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதற்கான மனப்பக்குவத்தை பழக்க மறக்கிறார்கள். தகாத உறவுநிலைகள், போதை பழக்கம், வேலையின்மை என சமூகத்தை அச்சுறுத்தும் எல்லா விஷயங்களும் தற்கொலைகளுக்கு காரணமாக அமைகின்றன. உயிரியல், உளவியல் மற்றும் சமூகக் காரணிகள் ஒன்றோடு ஒன்று இணையும் போது, ஒரு நபர் தற்கொலை முயற்சி செய்வதற்கான ஆபத்து பன்மடங்கு உயர்கிறது.
தற்கொலை குறித்த தவறான பார்வை
நம்மிடையே தற்கொலையை குறித்து சில தவறான புரிதல்கள் நிலவுகிறது. மன பலவீனம் உடையவர்கள் மட்டுமே தற்கொலை எண்ணத்தால் தூண்டப்படுகிறார்கள் என்று எண்ணாதீர்கள். தற்கொலை எண்ணம் என்பது பல்வேறு சூழலில், எல்லா வயதினருக்கும் ஏற்படக் கூடிய எண்ணமே‚ தற்கொலை முயற்சிகள் முன்னெச்சரிக்கை ஏதுமின்றி நிகழ்ந்து விடுவதில்லை.


நீங்கள் சாதிக்க பிறந்தவர்; தற்கொலை செய்துகொள்ள அல்ல...படத்தின் காப்புரிமைAURUMARCUS

பொதுவாக, அந்த நபர் தனது தற்கொலை உணர்வுகளை யாரேனும் ஒருவரிடமாவது பகிர்ந்து கொள்கிறார். அது நிராகரிக்கப்படும்போதே, நம்பிக்கை இழந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். 'எனக்கு வாழப் பிடிக்கவில்லை", "நான் பாரமாகி விட்டேன்", "நான் இறப்பதே மேல்" என்று உங்களிடம் யாராவது சொன்னால் அதை 'சும்மா சொல்கிறார்கள்", 'தானாகவே சரியாகிவிடும்" என்று எண்ணிவிடாதீர்கள். அவர்களுடைய மனச்சோர்வின் வெளிப்பாடாக அந்த வார்த்தைகள் இருக்கலாம்.
நீங்களும் தற்கொலையை தடுக்கலாம்
ஒருவரிடம் தற்கொலை எண்ணம் மேலோங்கி இருப்பதை அறிய வெளிப்படையாக பேசுதல் அவசியம். நாம் தற்கொலைப் பற்றி பேசுவதால் ஒருவர் தற்கொலைக்கு தூண்டப்படுவாரோ என்ற பயம் தவறானது. மனச்சோர்வுடன் தற்கொலை எண்ணம் கொண்டிருப்பவரிடம் அவரின் உணர்வுகளைப் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் போது, அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும். சரியான சிகிச்சை மனச்சோர்வையும், தற்கொலை எண்ணத்தையும் மாற்றும்.
சட்டத்தின் பார்வையில், தற்கொலை முயற்சி குற்றமாக பார்க்கப்பட்ட காலம் மாறி, அது சிகிச்சை தரப்பட வேண்டிய மனரீதியான சிக்கல் என்றே கருதப்படுகிறது. இந்த வருடம் உலக தற்கொலை தடுப்பு தினத்திற்கான கருப்பொருள் "Working together to Prevent Suicide" என்பதே. தற்கொலை தடுக்கப்படக் கூடிய ஒன்றுதான். கூட்டு முயற்சி தற்கொலையின் எண்ணிக்கையையும், தாக்கத்தையும் குறைக்கும் என்பதில் ஐயமில்லை.


நீங்கள் சாதிக்க பிறந்தவர்; தற்கொலை செய்துகொள்ள அல்ல...படத்தின் காப்புரிமைDOMOSKANONOS

இதற்கு முதல்படி, தற்கொலைப் பற்றிய விழிப்புணர்வை, உங்கள் சமூக வட்டத்தில் ஏற்படுத்துங்கள். மனச்சோர்வு, மனநல மருத்துவ சிகிச்சை முறைகளால் குணப்படுத்தக்கூடிய ஒன்று என்பதை உணருங்கள். உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ, முன்பு போல் உற்சாகமாக இல்லை, எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை இழந்து பேசுகிறார்கள் என்றால், அவர்களை விட்டு விலகாதீர்கள். அவர்களுடைய மனதில் எதிர்மறை எண்ணங்கள் புதைந்து கிடக்கிறதா என்பதை கனிவாகப் பேசி கண்டறியுங்கள்.
என்ன செய்வது என்று தெரியமால் தவறான முடிவை எடுக்கும் பலருக்கு உங்களுடைய ஆறுதலான வார்த்தையும் சிகிச்சைக்கு சரியான வழிகாட்டுதலும், மிக முக்கியம். தற்கொலை எண்ணம் மாறி, உற்சாகத்துடன் மீண்டு வரும் ஒருவரின் புன்னகை நமக்கு ஏற்படுத்தும் மனநிறைவை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. தற்கொலையை தடுப்பதற்கு உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு உண்டு.
வாழ்க்கை இருட்டாகத் தெரிகிறதா? அச்சம் வேண்டாம்‚ நீங்கள் புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டிருக்கிறீர்கள்.