இரு சட்டபூர்வ வயதை அடைந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் பாலுறவு கொள்வதை குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 ஐ ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
"இயற்கையின் விதிகளுக்கு மாறாக ஓர் ஆண், பெண் அல்லது விலங்குடன் பாலுறவு கொள்பவர்கள் ஆயுள் சிறை தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை ஆகிய தண்டனைக்கு உள்ளாவார்கள். அவர்கள் அபராதம் செலுத்தவும் பொறுப்பானவர் ஆவார்கள்," என்று பிரிவு 377 கூறுகிறது.
விக்டோரியன் காலத்தின் இந்தச் சட்டப்பிரிவு 150 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ளது.
அக்டோபர் 2017ஆம் தேதி வரையிலான தகவலின்படி நெதர்லாந்து, பெல்ஜியம், கனடா, ஸ்பெயின், தென்னாபிரிக்கா, நார்வே, சுவீடன், மெக்சிகோ, ஐஸ்லாந்து, போர்ச்சுகல், அர்ஜென்டினா, டென்மார்க், உருகுவே, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரேசில், பிரிட்டன், லக்ஸம்பர்க், அமெரிக்கா, பின்லாந்து, கொலம்பியா, ஜெர்மனி மற்றும் மால்டா ஆகிய 25 நாடுகளில் ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமானதாக உள்ளது . பிற நாடுகளில் அது சட்டவிரோதமானது.
இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் ''நாட்டில் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை அரசியல் சட்டம் உறுதி செய்கிறது. கால மாற்றத்துக்கு ஏற்ப சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் தற்போதும் ஏற்புடையதாக இருக்காது. எனவே அரசியல் சட்டத்தின் 377வது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும். தன்பாலின உறவு என்பது சட்டவிரோதமானது அல்ல'' என கூறினர்.
மேலும், "ஒருவரின் சுய கருத்தை வெளியிடுவது தடை செய்யப்படுமானால் அது மரணத்திற்கு போன்றது. சமத்துவம் என்ற கம்பீரமான கட்டடத்தின் மீதே மற்ற எல்லா கம்பீரமான கட்டடமும் சாய்ந்திருக்கிறது. நமக்குள் உள்ள வேற்றுமையின் பலத்தை நாம் மதிக்க வேண்டும். பொறுமையும், ஒருவரின் உரிமைக்கு மரியாதை அளிக்கவும் வேண்டும். ஒருவர் எதுவாக இல்லையோ, அதை அவர்கள்மீது திணிப்பதைவிட ஒவ்வொருவரிடம் உள்ள வேறுபாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிற மனிதர்களைப்போலவே, இயல்பான மனிதர்களாகவும் அடிப்படை உரிமைகளுடனும் இருக்கும் உரிமை எல்.ஜி.பி.டி சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் உள்ளது.மிருகங்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வது என்பது குற்றமே." என்று தலைமை நீதிபதி தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment