பாறுக் ஷிஹான்
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பூராங்கலட்டிப் பகுதி வீட்டின் யன்னல் கம்பியை நன்கு வளைத்து உள்ளே சென்ற திருடர்கள் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இன்று திங்கட்கிழமை(03) அதிகாலை தனித்திருந்த வயோதிபத் தம்பதிகளின் வீட்டை இலக்கு வைத்தே இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டு வளர்ப்பு நாய்களுக்கு நெத்தலிக் கருவாடும்,சூடை மீன் பொரியலும் மருந்துடன் கலந்து வைத்த பின்னர் வீட்டின் பூஜை அறையின் பின் யன்னல் கதவை வளைத்து வீட்டினுள்ளே சென்ற திருடர்கள் வீட்டின் பூஜை அறைக் கதவைத் திறந்து வீட்டு அறைகள் முழுவதும் சல்லடை போட்டுத் தேடியுள்ளனர்.
பின்னர் அறையினுள் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருந்த வயோதிப குடும்பப் பெண்ணின் ஆறரைப் பவுண் தாலிக்கொடி, நான்கு பவுண் காப்பு, நான்கு பவுண் தங்கச் சங்கிலி, இரண்டு பவுண் கைச்சங்கிலி, அரைப்பவுண் மோதிரங்கள் என்பவற்றுடன் வங்கிப் புத்தகத்துடன் இணைந்த வகையில் வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் ரூபா பணம் உட்பட மொத்தமாக 75 ஆயிரம் ரூபா பணம், அடையாள அட்டை என்பனவும் திருடிச் செல்லப்பட்டுள்ளன.
குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் இராசா பரஞ்சோதியால் காலை சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, வீட்டின் யன்னல் கம்பியை வளைத்து அந்த இடைவெளிக்குள்ளால் வீட்டுக்குள் நுழைந்து திருட்டு இடம்பெற்றுள்ள நிலையில் திருட்டில் ஈடுபட்டவர்கள் சிறுவர்களாகவிருக்கலாம் எனவும், வீட்டிலுள்ள வயோதிபத் தம்பதிகளின் செயற்பாடுகளை அவதானித்து மேற்படி திருட்டு இடம்பெற்றிருக்கலாமெனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment