அனுமதியின்றி சிலைகள் வைத்து இனமோதல்களை ஏற்படுத்த வேண்டாம்






முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பொலிஸ் வலயம், பிரதேச செயலக பிரிவு, குமுழமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் புத்தர் சிலையை வைத்து விகாரை அமைக்கும் முயற்சியில் வெலிஓய விகாரையை சேர்ந்த கல்கமுவ சத்வ போதி தேரர் தலைமையிலான குழு நேற்று (04) எடுத்துக்கொண்ட முயற்சி காரணமாக இடம்பெற்ற பதற்ற நிலைமைகள் ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பில், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், அந்த பகுதியை உள்ளடக்கும் பிரதேச சபை தலைவர் ஆகியோரின் எழுத்து மூலமான அனுமதி இன்றி எந்த ஒரு மத ஸ்தலத்தையும் கட்டுவிக்கவோ அல்லது சிலைகளை ஸ்தாபிக்கவோ கண்டிப்பாக அனுமதிக்க வேண்டாம் என்று முல்லைத்தீவு, கிளிநொச்சி பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் மஹிந்த குணரத்னவுக்கும், ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம். ரத்னாயக்கவுக்கும் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இன்று (05) காலை பணிப்புரை விடுத்துள்ளார். 

இதுபற்றி அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மன்டாவலவையும் சற்று முன் தொடர்பு கொண்டு இது பற்றி கூறினேன். 

தொல்பொருள் திணைக்களத்தின் வவுனியா, முல்லைதீவு உதவி பணிப்பாளர், எழுத்து மூலம் அழைப்பு விடுத்து, வெலிஓய விகாரையை சேர்ந்த இந்த பெளத்த தேரை அழைத்துக்கொண்டும், மேலும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மற்றும் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கும் அறிவிக்காமலும், குறிப்பிட்ட குருந்தூர் மலை பகுதியை நோக்கி செண்டுள்ளார். 

இராணுவத்தின் ஒத்துழைப்பையும் அவர் கேட்டு பெற்றுக்கொண்டுள்ளார் என அறிய முடிகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸ் அங்கே இருக்கும் போது, இந்த விடயத்தில் இராணுவத்துக்கு அவசியமில்லை. எனவே தொல்பொருள் திணைக்களத்தின் வவுனியா, முல்லைதீவு உதவி பணிப்பாளரின் நடவடிக்கை மிகவும் தவறான பொறுப்பற்றது என தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் கூறினேன். 

இந்த தேரரின் நோக்கத்தை தடுத்து நிறுத்திய அந்த பிரதேசத்தை சார்ந்த தமிழ் இளைஞர்களும், சட்டம் ஒழுங்கை பாதுகாத்த பொலிஸாரும் மிகவும் பொறுப்புடன் நடந்து கொண்டுள்ளார்கள். பொறுப்பற்ற முறையில் நடந்துக்கொண்டுள்ள தொல்பொருள் திணைக்களத்தின் வவுனியா, முல்லைதீவு உதவி பணிப்பாளர் மற்றும் பெளத்த தேரருக்கு எதிராக வன்முறைகள் நிகழ்ந்திருக்குமானால், அது நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி இருக்கும். 

எனது நிலைப்பாட்டை பணிப்பாளர் நாயகம் ஏற்றுக்கொண்டார். இனிமேல் பெளத்த தேரர்களை அழைத்துக்கொண்டு இத்தகைய தொல்பொருள் ஆய்வு இடங்களுக்கு செல்வதை தவிர்க்கும் முகமாக தனது மாவட்ட உதவி பணிப்பாளர்களுக்கு அறிவிப்பதாக பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மன்டாவல என்னிடம் உறுதி அளித்துள்ளார். 

அத்துடன் அங்கு சென்ற தேரர் குழுவினர், புத்த பெருமானின் சிலை ஒன்றையும், கூடாரம் அமைக்கும் பொருட்களையும் கொண்டு சென்றுள்ளனர். அந்த பிரதேசத்தை அடாத்தாக கைப்பற்றி விகாரை அமைக்கும் அவர்களது உள்நோக்கத்தை இது காட்டுகிறது. தொல்பொருள் திணைக்கள செயற்பாடுகள் குறிப்பிட்ட மாவட்ட செயலாளருடன் தொடர்பு கொண்டு அவரது ஒத்துழைப்புடன் நடை பெற வேண்டும். 

எந்த ஒரு சமய பிரமுகர்களையும் இதில் தொடர்பு படுத்தி, எனது பொறுப்பில் உள்ள தேசிய இன நல்லிணக்கத்தை குழப்பிட வேண்டாம். தொல்பொருள் வேறு, சமயம் வேறு, என்பதை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மனதில் கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கில் உள்ள தொல்பொருள் ஸ்தலங்கள் கட்டாயமாக சிங்கள பெளத்த புராதன சின்னங்களாகவே இருக்க வேண்டும் தேவைப்பாடு இல்லை. 

இன்று தொல்பொருள் திணைக்களம் ஒரு இன மத ஆக்கிரமிப்பு நிறுவனமாக தமிழ் மக்கள் மத்தியில் தோற்றப்பாடு ஏற்பட்டுள்ளது என்பவற்றை கவனத்தில் கொள்ளும்படி, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மன்டாவலவிடம் அமைச்சர் மனோ கணேஷன் மேலும் தெரிவித்துள்ளார்.