சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்குள்ளான சிறுமி ரிசானா நபீக்கை போலி ஆவணங்கள் ஊடாக வெளிநாட்டுக்கு அனுப்பிய அதே நபர், கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவரை 21 வயது யுவதி என போலி கடவுச்சீட்டில் சவூதி அரேபியாவுக்கு அனுப்பிய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணங்களை செய்து அதன் ஊடாக செல்லுபடியற்ற கடவுச்சீட்டை தயாரித்து சிறுமி ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பியமை தொடர்பில் தண்டனை சட்டக் கோவையின் 360 ஈ, குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 45 (2) ஆம் அத்தியாயத்துக்கு அமைவாக அவரைக் கைது செய்ததாகவும், கங்கா நாகொட வீதி, பேருவளையைச் சேர்ந்த தம்பி லெப்பை அப்துல் சலாம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் எனவும் சி.ஐ.டி. யினர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். அதன்படி சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதிவான் ரங்க திஸாநாயக்கவால் நாளை வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,
ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்திலிருந்து கடந்த 2018.03.04 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது. அதில் ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியுள்ள ஒருவர் தொடர்பில் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
கிண்ணியாபகுதியைச் சேர்ந்த அப்துல் மஜீத் சேகு அப்துல் காதர் ரிஹானா என்பவர் குறித்தே அதில் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. குறித்த யுவதி ஓமான் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்த நிலையில் அவரிடம் மேலதிக வாக்குமூலம் ஒன்றினைப் பெற்று அனுப்புமாறு சி.ஐ.டியினர் ஆலோசனை வழங்க கடந்த 2018.03.10 ஆம் திகதி அதுகுறித்து மேலதிக வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 2017.07.10 ஆம் திகதியே அந்த யுவதி மருதானையிலுள்ள வேலை வாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றூடாக வெளிநாட்டுக்கு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அச்சிறுமியிடம் முன்னெடுக்கப்ப்ட்டுள்ள விசாரணைகளில், அவர் 10 வயது சிறுமியாக இருந்தபோது சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டமை தொடர்பில் விசாரணைகளில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
‘ தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் உப முகவரான பெண் ஒருவர், 2010 இல் தன்னையும் மேலும் நான்கு சிறுமிகளையும் வெளிநாட்டுக்கு அனுப்பும் நோக்குடன் கொழும்புக்கு வேலை வாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றுக்கு அழைத்து வந்ததாக அந்த யுவதியின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த பெண் தங்களை பெயர், முகவரி தெரியாத முஸ்லிம் நபர் ஒருவரிடம் அழைத்து சென்றதாகவும், அதன் பின்னர் அவரின் ஆலோசனைப்படி தங்குமிடமொன்றில் தங்கியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்போதே, 4152293 எனும் கடவுச்சீட்டை தனது கைகளுக்குத் தந்ததாகவும் அதில் தனது புகைப்படம், பெயர் என்பன இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எனினும் அந்தக் கடவுச் சீட்டில் அடையாள அட்டை இலக்கமானது 896416758 v என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பிறந்த திகதி 1989.05.20 என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட யுவதியியின் உண்மையான பிறந்த திகதி 2000.11.15 என்று கூறும் பொலிஸார், அவரிடம் இந்தக் கடவுச்சீட்டு கொடுக்கப்படும்போது அவருக்கு 10 வயது என நீதிமன்றுக்கு அறிக்கை ஊடாக சுட்டிக்காட்டியுள்ளனர். 1762 எனும் இலக்கத்தை உடைய போலி பிறப்புச் சான்றிதழ், போலி அடையாள அட்டை ஆகியவற்றை வைத்தே போலியாக கடவுச்சீட்டும் பெறப்பட்டுள்ளதை சி.ஐ.டி. விசாரணைகளில் கண்டறிந்துள்ளது. அதன்படி குறித்த யுவதி சிறுமியாக இருந்தபோது அதாவது, 2010.08.10 ஆம் திகதி சவூதி அரேபியாவுக்கு போலி கடவுச்சீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக அனுப்பட்டுள்ளதாக கூறும் சி.ஐ.டி., அங்கு அவர் இரு வருடங்கள் வேலைசெய்த பின்னர் நாடு திரும்பியுள்ளதாகவும், அதன் பின்னர் குவைத்துக்கும் வேலைக்காக சென்றுள்ளதாகவும் நீதிவானுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையிலேயே தற்போது 18 வயதான குறித்த யுவதி ஓமானில் வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றிருந்தபோது அங்கு இடம்பெற்ற கொடுமைகளை சகிக்க முடியாமல் ஓமான் தூதரகத்துக்கு சென்று விடயங்களை கூறியபோது, அதனை மையப்படுத்தி சி.ஐ.டி. முன்னெடுத்த விசாரணைகளிலேயே இந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படியே சந்தேக நபரான போலி ஆவணங்களை தயாரித்து வெளிநாட்டுக்கு குறித்த யுவதியை சிறுமியாக இருந்தபோது அனுப்பிய தம்பி லெப்பை அப்துல் சலாமை சி.ஐ.டி. கைது செய்து கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்துள்ளது.
குறித்த சந்தேக நபர் ஏற்கனவே இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர் எனவும், கடந்த 2013 ஜனவரி 9 ஆம் திகதி சவூதி அரேபியாவில் தவாத்மி சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சிறுமி ரிசானா நபீக்கையும் போலி ஆவணங்கள் ஊடாக சவூதிக்கு அனுப்பிய குற்றவாளி எனவும் சி.ஐ.டி.யினர் தெரிவிக்கின்றனர்.
1988 பெப்ரவரி 4 இல் ரிசானா நபீக் பிறந்திருந்த நிலையில் தனது 17 வது வயதில் 2005 மே 4 இல் பணிப்பெண்ணாக தொழில் வாய்ப்புப் பெற்று அவர் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டிருந்தார். சிறுவர்கள் வெளிநாடுகளில் தொழில்புரிய தடையுள்ளதால், இவரது பிறந்த திகதி தொழில் முகவரால் 02.-02.1982 என மாற்றப்பட்டு கடவுச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது.
2005 மே 22 இல், குழந்தையின் தாய் தனது குழந்தையை ரிசானாவின் பராமரிப்பில் விட்டு விட்டு வெளியில் சென்றிருந்த போது, குழந்தைக்கு சிறிது நேரத்தில் புட்டிப்பால் ஊட்டும்போது குழந்தை மூச்சுத் திணறி இறந்து விட்டது. தான் அக்குழந்தையைக் கொலை செய்யவில்லை என்றும், பாலூட்டும் போது மூச்சுத் திணறி இறந்ததாகவும் ரிசானா தெரிவித்திருந்தார். ஆனாலும், குழந்தையின் பெற்றோரும், காவல்துறையினரும் ரிசானா, குழந்தையைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டி இருந்தனர்.
சவூதி காவல்துறையினர் ரிசானாவிடம் இருந்து வாக்குமூலத்தைப் பெற்று வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு விசாரணையின்போது ரிசானாவிற்கு மொழி பெயர்ப்பாளராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். ரிசானா தரப்பில் வாதாடுவதற்கு யாருமற்ற ஒரு சூழலில் சட்ட ஆலோசனையைக் கூட பெற்றுக்கொள்ள முடியாதவராக இவர் இருந்தார். 2007 ஜூன் 16 ஆம் நாள் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே கடந்த 2013 ஜனவரி 9 ஆம் நாள் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி சவூதி அரேபியாவில் தவாத்மி சிறையில் முற்பகல் 11.40 (இலங்கை நேரப்படி பிற்பகல் 2.10 மணியளவில்) ரிஸானாவின் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment