1வது மாபெரும் சர்வதேச சுதேச மருத்துவ ஆய்வு மாநாடும் கண்காட்சியும் – 2018




(பைஷல் இஸ்மாயில்)
கிழக்கு மாகாண சுதேச திணைக்களமும், கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக சித்த மருத்துவப் பிரிவும் இணைந்து நடாத்தும் சர்வதேச சுதேச மருத்துவ ஆய்வு மாநாடும் கண்காட்சியும் ‘சுதேச மருத்துவத்தின் புதிய கண்டுபிடிப்புக்களை ஆய்வுகள் மூலம் வெளிக் கொண்டுவருதல்’ எனும் கருப்பொருளில் இடம்பெற்று வருவதாக கிழக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை ஆணையாளர் வைத்திய கலாநிதி ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.
இந்த மாநாடும் கண்காட்சியும் எதிர்வரும் மாதம் 4, 5, 6 ஆகிய மூன்று தினங்களில் திருகோணமலை மாவட்ட உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள கலாச்சார மண்டபத்தில் நடாத்த திட்டமிடப்பட்டு சகல ஏற்பாடுகளும் நடைபெற்றுவருவதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இம்மாநாடும், கண்காட்சியும் 03 பகுதிகளாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதில் 4, 5 ஆம் திகதிகளில் சுதேச, ஆங்கில மருத்துவம் சார்ந்த வல்லுனர்கள், வளவாளர்கள், சுதேச மருத்துவ ஆராய்ச்சியாளர்களினால் பல்வேறு வகையான ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கடவுள்ளதாகவும், இம்மாநாட்டில் 20 க்கும் மேற்பட்ட மலேசியா மற்றும் இந்தியா நாட்டைச் சேர்ந்த பேராளர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர். மேலும் சுமார் 80க்கும் மேற்பட்ட சுதேச மருத்துவ ஆராய்ச்சியாளர்களின்; ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.
இம்மாநாட்டின் மற்றொரு நிகழ்வாக கிழக்கு மாகாணத்திலுள்ள பாராம்பரிய மருத்துவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான விடயங்களாகவும் இது இடம்பெறவுள்ளது.
குறித்த மூன்று தினங்களிலும் அரச, மாகாண ஆயுள்வேத திணைக்களங்கள், அரச தனியார் சுதேச மருந்து உற்பத்தி நிறுவனங்கள், சுதேச மருத்துவ பல்கலைக் கழகங்கள், பாராம்பரிய வைத்தியர்கள் ஆகியோர்களின் பங்களிப்புடன் இது நடாத்தப்படவுள்ளன. இக்கண்காட்சியில் மூலிகைப் பரம்பல், மூலிகைகளை இனங்காணல் தொற்றாநோய்களின் தீவிரத்தன்மையை குறைக்கவும் நோய் வராமல் தடுக்கவும் உரிய உணவுகள் நாளாந்த பழக்கவழக்கங்கள் யோகா பயிற்சிகள் என்பன காட்சிப்படுத்தப்படவுள்ளன.
ஆயுள்வேத மருத்துவ உல்லாசத்துறையில் பிரபல்யமான பஞ்சகர்மம், தொக்கணம், வர்மம், கிஜாமா போன்ற சிகிச்சை முறைகள் மற்றும் உளவள சிகிச்சை என்பனவும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. அத்துடன் விசேட இலவச மருத்துவ முகாம் இந்தியா, இலங்கை சுதேச மருத்துவர்கள் கொரியா அக்குபஞ்சர் மருத்துவர்கள் பாராம்பரிய வைத்தியர்கள் உள்ளடங்கிய குழுவினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது
இம்மாநாடு கண்காட்சி, இலவச மருத்துவ முகாம் ஊடாக சுதேச மருத்துவ துறைக்கு ஓர் அங்கீகாரம் கிடைப்பதுடன் மாணவர்கள் பொதுமக்களிடையே உணவு, வாழ்க்கை நடைமுறை பழக்கவழக்கங்களில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக ஆரோக்கியமான, மகிழ்ச்சியான சமுதாயம் ஒன்றை கட்டி எழுப்ப நாங்கள் எதிர்பார்க்கின்றோம். தொற்றா நோய்களுக்கான மருத்துவ விஞ்ஞான கலந்துரையாடல் மற்றும் ஆயுள்வேத கண்காட்சி என்பன நடைபெறவுள்ளன. என்றார்.
சர்வதேச சுதேச மருத்துவ ஆய்வு மாநாடும் கண்காட்சிக்கு சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித செனாரத்ன, சுகாதார சுதேச வைத்தியத்துறை பிரதி அமைச்சர் பைசல் காசீம், கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போஹல்லாகம, கிழக்கு மாகாண பிரதம செயலாளர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் உள்ளிட்ட அமைச்சின் உயராதிகாரிகள், வைத்தியர்கள் என கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.