வரலாறு காணாத கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும் பேரழிவை சந்தித்திருக்கிறது கேரள மாநிலம். மீட்புப்பணிகள் துரித கதியில் நடந்து கொண்டிருக்க உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39-ஐ தொட்டுள்ளது.
தற்போதைய நிலவரம் என்ன?
கேரளாவில் 8 நாட்களாக தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக இதுவரை 39 பேர் பலியாகியுள்ளதாக மாநில அரசின் வருவாய்த் துறை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
பேரிடர் காரணமாக சுமார் 8,979 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போது கேரளாவிலுள்ள பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன் கூறுகிறார்.
மேலும், இந்த இயற்கை பேரிடரில் 5 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 21 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
5.91 கோடி ரூபாய் அளவுக்கு வீடுகள், தோட்டங்கள், சுமார் 1,513 ஹெக்டர் அளவிலான விளை நிலங்கள் சேதம் அடைந்துள்ளன. இதன் மொத்த சேத மதிப்பு 16.65 கோடி ரூபாய் என கண்டறியப்பட்டுள்ளது.
"இப்படியொரு பேரழிவை பார்த்ததில்லை"
கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இடுக்கியும் ஒன்று. பிபிசி தமிழிடம் பேசிய இடுக்கி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரோஷி அகஸ்டின், மீட்புப் பணியில் முப்படைகளும் துரிதமாக ஈடுபட்டு வருவதாகவும், இடுக்கியில் உள்ள மீட்பு முகாமிலுள்ள பொதுமக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
இடுக்கி முகாமில் சுமார் 500 பேர் தங்கியிருப்பதாகவும் அதில் 70 பேர் குழந்தைகள் என்றும் தெரிவித்த ரோஷி அகஸ்டின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயத்தை கட்டுப்படுத்துவதற்காக அலோபதி, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகளை கொண்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் முதல் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் உடனடியாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மோசமாக பாதிக்கப்பட்டுள்ள வயநாடு
இடுக்கியை தவிர்த்து எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், வயநாடு ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் வயநாடு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 3,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
20,000 வீடுகள் முழுமையாக பாதிப்பு
இயற்கை பேரிடரால் ஏற்பட்டுள்ள சேதத்தை முதற்கட்டமாக கணக்கிட்டதில் சுமார் 8,316 கோடி ரூபாய் என கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 20 ஆயிரம் வீடுகளும், பொதுப்பணித்துறையின் கீழ் போடப்பட்ட 10 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகளும் சேதம் அடைந்துள்ளதாகவும் கேரள முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
10 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு
1924 ஆம் ஆண்டுக்கு பிறகு, கேரளா எதிர்கொள்ளும் இரண்டாவது மிகப்பெரிய வெள்ள பேரிடர் இது. கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், 27 முக்கிய அணைகளில் நீர் நிரம்பியுள்ளதால் திறக்கப்பட்டிருப்பதாகவும் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுபோன்று தீவிரமாக ஏற்படும் இயற்கை பேரிடர்கள் அரிதானவையே என்றாலும் அது மாநிலத்திற்கு ஏற்படுத்தியுள்ள சேதம் மிக அதிகம் என்று முதல்வர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment
Post a Comment