சத்தியாகிரக போராட்டம்




(க.கிஷாந்தன்)
அக்கரபத்தனை பெருந்தோட்ட பகுதியில் லங்கம் கம்பனியின் கீழ் இயங்கும் வேவர்லி தோட்டத்தில் முன்னால் தொழிற்சங்க தோட்ட கமிட்டி ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உண்ணாவிரதத்தின் ஊடான சத்தியாகிரக போராட்டம் அத்தோட்டத்தின் விளையாட்டு மைதானத்தில் 11.08.2018 அன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
சுமார் 30ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த சத்தியாகிரக போராட்டத்தில் மலையகத்தில் வாழும் பெருந்தோட்ட மக்களுடைய உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள் முன்வைத்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு தனி வீடுகள் அமைத்துக் கொடுப்பட வேண்டும், தற்பொழுது வாழ்கின்ற லயன் குடியிருப்பு முற்றாக ஒழிக்கப்பட வேண்டும், தொழிலாளர்களுடைய வாழ்க்கை வருமானத்தை உயர்த்தும் வகையில் நாளாந்த சம்பளத்தை இன்றைய கால சூழ்நிலைக்கு ஏற்புடையதாக ஆயிரத்திற்கு அதிகமாக அதிகரிக்கப்பட வேண்டும், இந்த விடயத்தில் நாட்டின் ஜனாதிபதி தலையிட்டு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என முக்கிய கோரிக்கை அடங்களாக, தொழிற்சங்கங்களே தொழிலாளர்களை ஏமாற்றி விடாதீர்கள், ஊழியர் சேமலாப நிதியை ஏப்பம் விட்டவர்களை அடையாளப்படுத்துங்கள், அரசாங்கத்தால் 1994ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சமூர்த்தி அபிவிருத்தி திட்டத்தின் உதவு தொகைகளில் விடுப்பட்ட தோட்ட தொழிலாளர்களின் வறுமையானவர்களை இணங்கண்டு உள்வாங்குங்கள், தற்போது தோட்ட நிர்வாகங்கள் தேயிலைகளை பாராமறிப்பதற்கு தவறி வரும் நிலைமையை மாற்றியமைத்து செயல்பட உதவுங்கள் என இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தை அறைகூவல் போராட்டமாக முன்னெடுத்தனர்.


வெள்ளை ஆடைகள் அணிந்து நிறை குடம் வைத்து விளக்கேற்றியவாறு இந்த சத்தியாகிரக போராட்டம் அறைகூவல் போராட்டமாக முன்னெடுப்பதாக போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களும், போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தும் வேவர்லி தோட்ட முன்னால் தொழிற்சங்க தோட்ட கமிட்டியினரும் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.