மலையகத்தில் மழை




(க.கிஷாந்தன்)

மலையகத்தில் பல பகுதிகளுக்கு தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு ஒரு சில இடங்களில் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன.

அட்டன் சலங்கந்த பிரதான வீதியில் 13.08.2018 அன்று அதிகாலை 6.30 மணியளவில எட்லி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் இந்த வீதியூடான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, எட்லி தோட்டத்திற்கு 13.08.2018 அன்று அதிகாலை 3.30 மணியளவில் பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததன் காரணமாக இந்த வீட்டின் ஒரு பகுதி அளவு சேதமடைந்துள்ளதுடன் இங்கு வாழும் 32 குடும்பங்கள் ஆபத்தான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் அட்டன் அலுத்கம பகுதியில் காலை ஏற்பட்ட மண்சரிவினால் அவ்விடத்தில் ஒரு வழி போக்குவரத்து மாத்திரமே இடம்பெற்று வருகின்றன.

நீரேந்தும் பிரதேசங்களுக்கு பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம்  மிக விரைவாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பல இடங்களில் கடும் காற்று காரணமாக மரம் முறிந்து வீழ்ந்துள்ளதனால் அடிக்கடி மின்சார துண்டிப்பும் ஏற்பட்டு வருகின்றன.

தொடர்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக கட்டட தொழிலாளர்கள் வேலைகளை மேற்கொள்ள முடியாது பெரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அடை மழைகாரணமாக தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் குறைவடைந்துள்ளதுடன், தேயிலை உற்பத்தியும் வீழ்ச்சியடைந்துள்ளன.

தொடர்ச்சியாக மலையகத்தில் பல பகுதிகளுக்கு கடும் காற்றுடன் தொடர் மழை பெய்து வருவதனாலும், தொடர் மலை பகுதிகளில் காணப்படும் பல வீதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதனாலும் வாகன சாரதிகள் அவதானமாக தமது வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.