மத்ரஸா மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு




நண்பர்களுடன் குளத்தில் குளிக்கச் சென்ற ஏறாவூர் மத்ரஸாவில் கல்வி பயிலும் மணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று புதன் கிழமை மட்டக்களப்பு எல்லைக் கிராமமான வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் ஜெயந்தியாவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

ஏறாவூர் தக்காப் கிராமத்தினைச் சேர்ந்த முகம்மது அனஸ் முகம்மது சாகீர் வயது (23) என்பவரும் அவரது நண்பரான மிச்சி நகர் ஏறாவூரைச் சேர்ந்த முகம்மது அசனார் முகம்மது சாதீக் வயது (22) என்ற இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

இன்று காலை உயிரிழந்த இருவரும் ஜெயந்தியாவிற்கு சென்று அங்குள்ள தமது சக நண்பர்கள் இருவருடன் குளத்தில் குளிப்பதற்காக தோணியில் சென்றுள்ளனர். 

இதன்போது தோணி கவிழ்ந்ததினால் நால்வரும் நீரில் மூழ்கியுள்ளனர். குறித்த சம்பவத்தினை பார்வையிட்ட பொதுமக்கள் இருவரை காப்பாற்றியுள்ளனர். 

மேற்படி நபர்கள் இருவரையும் காப்பாற்றமுடியாமல் போயுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

சடலம் உடற்கூற்று ஆய்விற்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

உடற் கூற்றாய்வின் பின் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

(மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்)