கிழக்கு மாகாண தேசிய பாடசாலையின் அதிபர்கள்- இம்ரான் எம்.பி சந்திப்பு




(அப்துல்சலாம் யாசீம்)
கிழக்கு மாகாண தேசிய பாடசாலையின் அதிபர்கள்- இம்ரான் எம்.பி சந்திப்பு

கிழக்குமாகாண தேசிய பாடசாலைகளின் அதிபர்களுக்கும் கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரானுக்கும் இடையிலான கலந்துரையாடல் திங்கள்கிழமை கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட ஆளணி குறைபாடுகள், தேசிய இடமாற்ற கொள்கையை அமுல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், பாடசாலைகளில் நிலவும் பௌதீக குறைப்பாடுகள், கல்வி அமைச்சால் முன்னெடுக்கப்படும் திட்டங்களை அமுல்படுத்துவதில் தமது பாடசாலை எதிர்நோக்கும் சவால்கள் சம்மந்தமாக பாடசாலை அதிபர்களால் பாராளுமன்ற உறுப்பினரிடம் முறையிடப்பட்டது.

இதன் பின் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கல்வி அமைச்சசர் அகிலவிராஜ் காரியவசத்தின் வழிகாட்டலில் நம் மாணவர்களின் கல்வி மட்டத்தை மேம்படுத்த பல செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். சாதாரண தர பரீட்சையில் சித்தியடைய தவறிய மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்ட ஒரே அரசாங்கம் நாங்கள்தான். அவர்களுக்காகவே தரம் 13 என்ற திட்டத்தை செயல்படுத்துகிறோம்.

பாடசாலைகளை காணப்படும் பௌதீக குறைபாடுகள் அனைத்தும் படிப்படியாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இவற்றில் நாம் எமது பெயர்களை பொறித்துகொள்வதில்லை. “அண்மையை பாடசாலை சிறந்த பாடசாலை” என்றே பெயர் சூட்டியுள்ளோம். ஆனால் கடந்த அரசில் “மஹிந்தோதய” என்ற பெயரை சூட்டவேண்டும் என்பதுக்காகவே கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. நாம் கல்வி அமைச்சை பொறுப்பேற்ற பின் 90 வீதமான பாடசாலைகளில் நீரிணைப்பு, கழிப்பறை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்து வருகிறோம்.

எனவே உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் நான் பெற்றுத்தர தயாராக உள்ளேன். மேல் மாகாண பாடசாலைகளை போன்று எமது மாகாண பாடசாலையையும் அனைத்து துறைகளிலும் சிறந்த பெறுபேற்றை காட்டும் பாடசாலைகளாக மாற்ற நீங்கள் அனைவரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் கல்வி அமைச்சின் பிரதி பணிப்பாளர்களான ரோஹன பெர்னாண்டோ,இர்சான்,கிழக்குமாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் மனோகரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.