இஸ்லாமாபாத்:
342 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கு கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சியமைக்க தேவையான தனிப்பெரும்பான்மையான 172 உறுப்பினர்களின் பலம் கிடைக்கவில்லை.
116 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரி இ இன்சாப் கட்சிக்கு 9 சுயேட்சை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதன் மூலம் அக்கட்சியின் பலம் 125 ஆக உயர்ந்தது.
அடுத்தபடியாக தேர்தலில் வெற்றிபெற்ற கட்சிகளுக்கு விகிதாச்சார முறைப்படி பெண் வேட்பாளர்களுக்கு என ஒதுக்கப்பட்ட 60 தொகுதிகள் மூலம் இம்ரான் கட்சிக்கு கூடுதலாக 28 உறுப்பினர்கள் கிடைத்தனர்.
இதேபோல், சிறுபான்மையின இனத்தை சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி உறுப்பினர்களின் எண்ணிக்கையுடன் சேர்த்து மொத்தம் 158 உறுப்பினர்களின் ஆதரவுடன் இம்ரான் கானின் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. வரும் 18-ம் தேதி அந்நாட்டின் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கவுள்ளார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் 15-வது அவையின் முதல்நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர், புனித குர்ஆனின் சில வசனங்கள் ஓதியபிறகு அவை நடவடிக்கைகள் தொடங்கின.
முன்னதாக, முதன்முறையாக எம்.பி.யாக வெற்றிபெற்று அவைக்கு வந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு இம்ரான் கான் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர், இம்ரான் கான், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, அக்கட்சியின் முன்னாள் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் அதிபருமான ஆசிப் அலி சர்தாரி, முன்னாள் ஆளும்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷரிப் உள்பட 329 உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்று கொண்டனர். விரைவில் பதவி விலகவுள்ள சபாநாயகர் அயாஸ் சாதிக் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய சபாநாயகர் தேர்தல் வரும் 15-ம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்புடன் பாராளுமன்றம் வரும் 15-ம் தேதி (14-ம் தேதி பாகிஸ்தான் சுதந்திர தினம் என்பதால்) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
15-ம் தேதி நடைபெறும் சபாநாயகர் தேர்தலில் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் சார்பாக ஆசாத் கைஸர் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் சையத் குர்ஷித் ஷா ஆகியோர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத்தில் தற்போது இம்ரான் கட்சியின் பலம் 158 ஆக இருந்தாலும், அதற்கு சரிநிகர் பலத்துடன் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சிக்கு 82 உறுப்பினர்களும், பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு 53 உறுப்பினர்களும், முத்தாஹிதா மஜ்லிஸ்-இ-அமல் கட்சிக்கு 15 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த 3 கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து 151 உறுப்பினர்களுடன் பலமான எதிர்க்கட்சியாக பாராளுமன்றத்தில் ஓரணியாக செயல்பட தீர்மானித்துள்ளன.
இந்நிலையில், இம்ரான் கானுக்கு எதிராக பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்னாள் பிரதமர் ஷாபாஸ் ஷரிப்பை முன்னிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன.
எனினும், முத்தாஹிதா குவாமி இயக்கத்தை சேர்ந்த 7 உறுப்பினர்கள், பலுசிஸ்தான் அவாமி கட்சியை சேர்ந்த 5 உறுப்பினர்கள், பலுசிஸ்தான் தேசிய கட்சியை சேர்ந்த 4 உறுப்பினர்கள், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த 3 உறுப்பினர்கள், மகா ஜனநாயக கூட்டணியை சேர்ந்த 3 உறுப்பினர்கள், அவாமி முஸ்லிம் லீக் கட்சி மற்றும் ஜமோரி வட்டான் கட்சியை சேர்ந்த தலா ஒரு உறுப்பினர் என மொத்தம் 24 எம்.பி.க்கள் இம்ரான் கானை ஆதரிக்கப் போவதாக தெரிவித்துள்ளதால் எதிர்க்கட்சிகளின் பலப்பரீட்சை தோல்வியில் முடியும். இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தானில் புதிய அரசு அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். #ImranKhan #Pakistan #ParliamentMembersTakeOath
பாகிஸ்தான் | இம்ரான் கான்
Post a Comment
Post a Comment