#WorldCup2018 கலக்கப்போவது குரோஷியாவா?ஜெயிக்கப் போவது பிரான்ஸா?






உலக கிண்ணத்தை 1998ல்  மட்டுமே வென்று 2006 இல் Runnerup ஆகத் தெரிவு செய்யப்பட்ட பிரான்ஸ் அணியும், 1998ம் அண்டு 3 வது இடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு, அதேவேளை முதல் தடவையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு கால் பதித்துள்ள நாடு குரோசியாவும் 2018 உலக கிண்ண கால்பந்தாட்ட  இறுதிப் பொட்டியில் கால் பதிக்கின்றன.
ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பெல்ஜியத்தை வென்று இறுதிப் போட்டிக்கு பிரான்ஸ் தகுதிபெற்றிருந்த நிலையில், நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற மற்றைய அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வென்று இறுதிப் போட்டிக்கு குரோஷியா தகுதிபெற்றுள்ளது.
இந்த உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னராகவே உலகக் கிண்ணத்தை வெல்லக்கூடிய அணியாகக் கருதப்பட்ட பிரான்ஸ், தாம் இறுதிப் போட்டிக்கு வந்தது வரைக்கும் தமது முழுமையான திறமை வெளிப்பாட்டை வெளிப்படுத்தலாமலே சிறிது சிறிதாக ஒவ்வொரு போட்டியிலும் தமது திறமை வெளிப்பாட்டை அதிகரித்து தேவையான நேரங்களில் கோல்களைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
மறுபக்கமாக, குழுநிலைப் போட்டிகளில் ஆர்ஜென்டீனாவை அபாரமாகத் தோற்கடித்ததைத் தொடர்ந்து, இறுதி 16 அணிகளுக்கான சுற்று, காலிறுதிப் போட்டி, அரையிறுதிப் போட்டி என மூன்றிலும் மேலதிக நேரம் வரை சென்றும் அதுவும் இறுதி 16 அணிகளுக்கான சுற்று, காலிறுதியில் பெனால்டி வரை சென்றே இறுதிப் போட்டிக்கு குரோஷியா வந்தடைத்திருக்கின்றது.
அந்தவகையில், பிரான்ஸை விட மேலதிகமாக 90 நிமிடங்கள் விளையாடியே இறுதிப் போட்டியை குரோஷியா அடைந்துள்ளமை காரணமாக அவ்வணியின் வீரர்கள் களைப்படைந்தவர்களாகக் காணப்படுகின்றனர். எவ்வாறாயினும் இதுவே குரோஷிய வீரர்களுக்கு நேர்மறையாக அமைகின்ற காரணியாக அமைகின்றது. ஏனெனில், இங்கிலாந்துடனான அரையிறுதிப் போட்டியில் இறுதிக் கட்டங்களிலேயே குரோஷிய வீரர்கள் பிரதியீடு செய்யப்பட்ட நிலையில் அவர்கள் சிறந்த தாங்குதிறனைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். மறுபக்கமாக, இத்தொடரில் ஒரு போட்டியில் கூட பிரான்ஸ் மேலதிக நேரம் வரை சென்ற போட்டியில் விளையாடியிருக்காத நிலையில், நாளை மறுதினம் அவ்வாறானதொரு சந்தர்ப்பம் அமைந்தால், அதை எவ்வாறு பிரான்ஸ் எதிர்கொள்வார்கள் என சந்தேகமாகவுள்ளது.
எவ்வாறாயினும் இறுதியாக 2006ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு வந்த 1998ஆம் ஆண்டு சம்பியன்களான பிரான்ஸுக்கே இவ்வாண்டு உலகக் கிண்ணத்தை வெல்வதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன. மீண்டுமொரு முறை கிலியான் மப்பேயை மையப்படுத்தியதாக வேகமான அதிரடியான நகர்வுகளை மேற்கொண்டு கோல்களைப் பெறுவதற்கு இறுதிப் போட்டியிலும் பிரான்ஸ் முயலும். இதற்கு போல் பொக்பா, பிளெய்ஸி மத்தியூடி, என்கலோ கன்டே ஆகிய மத்தியகள வீரர்களே போட்டியை தீர்மானிப்பவர்களாக விளங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் தவிர, மத்திய பின்கள வீரர்களான ரபேல் வரானே, சாமுவேல் உம்டிட்டி ஆகியோர் பிரான்ஸின் தடுப்பரணுக்கு முக்கியமாக விளங்குகின்ற அதேவேளை, காலிறுதி, அரையிறுதி போன்று இவர்களிலொருவர் தலையால் முட்டி பெறும் கோல் உலகக் கிண்ணத்தை பிரான்ஸுக்கு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதுக்கில்லை.
மறுபக்கமாக, கிலியான் மப்பே முன்னேறிச் சென்றாலும் குரோஷியாவின் உறுதியான பின்களத்தை தாண்டிச் செல்ல வேண்டிய தடையொன்று காத்திருக்கின்றது. இந்த உலகக் கிண்ண தரவுகளின்படி குரோஷியாவே சிறந்த பின்களத்தைக் கொண்டதாகக் காணப்படுகின்ற நிலையில், பிரான்ஸின் வேகமான அதிரடி நகர்வுகளைத் தடுத்து, தமக்கு கிடைக்கும் வாய்ப்பொன்றில் கோல் பெற்று வெல்லவே குரோஷியா முயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, நட்சத்திர வீரர்களான லூகா மோட்ரிட்ச், இவான் றகிட்டிச், இவான் பெரிசிக், மரியோ மண்டூஸிக் ஆகியோரையே குரோஷியா நம்பிக் காணப்படுகின்றது.
இறுதிப் போட்டி, இலங்கை நேரப்படி நாளை மறுதினம் இரவு 8.30 மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், பெல்ஜியம், இங்கிலாந்துக்கிடையேயான மூன்றாமிடத்துக்கான போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.