உலக மக்கள் தொகை தினம்





#IsmailUvaizurRahman

உலக மக்கள் தொகை மொத்தமாய் எழுநூற்று அறுபத்தைந்து கோடி தோராயமாய் இன்று. 7.6 பில்லியன் மக்களாகும்.

இருபதாம் நூற்றாண்டில் மட்டும் மக்கள் எண்ணிக்கை ஏற்றம் மும்மடங்கு .
 சுகாதாரம், மருத்துவம், உணவு என்று காரணம் காட்டுகிறது ஆய்வு.
கொண்டாட்டத்துக்கு ஏற்புடையது.

முப்பது ஆண்டுகளில் மக்கள் தொகை மொத்தம் தொள்ளாயிரம் கோடி ஆக வாய்ப்பு இது எழுச்சியா இல்லை வீழ்ச்சியா ? எதுவும் ஒரு சிகரத்தை தொட்டபின் இறங்கும்.

 இது ஒரு இயற்கையின் கட்டளையில் அடங்கும். மக்கள் தொகை சிகரத்தை எட்டி விட்டது, இந்த நூற்றாண்டில். இனி இறக்கம் மட்டுமே சாத்தியம், கசப்பான உண்மை, மனமே! ஏற்று கொள். 

பாரம் தாங்காமல் பூமி பந்து தள்ளாட்டம். தண்ணீர் இல்லாமல் வரும் திண்டாட்டம். காடுகள் மறைவு, கட்டிடங்கள் பெருக்கம், மழை குறைவு, வறட்சியில் உயிரினம் இறக்கும். தண்ணீர் இன்றி தாகம் வறட்டும். சொட்டு தண்ணீருக்காக சண்டைகள் நடக்கும். தண்ணீர் சண்டை போர்க்களமாய் மாறும். நீர் இல்லா ஆற்றில் செந்திரவம் பெருக்கெடுத்து ஓடும். 

மனித உயிர் விடுத்து மற்ற உயிர்கள் மறையும். மற்ற உயிரை அழித்து மனிதமும் குறையும். சுயநலம் ஒன்றே மனதில் தலை விரித்தாடும். தன்னுயிர் ஒன்றே குறியாய் மற்றுயிர் கொல்லும். ஆங்காங்கே நீருக்கு சண்டைகள் நிகழும். அதை மூன்றாம் உலக போரென்று சொல்லும். எத்தனை உயிர்கள் போகும், எத்தனை உயிர்கள் வாழும், இறைவனுக்கே அது வெளிச்சம். மக்கள்தொகை கட்டுக்குள் வர இன்றே முயற்சிகள் செய்தால் தலை போகும் பிரச்னைகள் குறையும். 

இது எத்தனை சாத்தியம் ? யாருக்கு தெரியும் ? மொத்த மக்கள் தொகையில், சீனாவும் இந்தியாவும் மூன்றில் ஒரு பாகம் பெருமுயற்சி செய்து கட்டுப்படுத்த வேண்டும். காடுகள் வளர்ப்பு, ரசாயனம் குறைப்பு, நெகிழியின் விடுப்பு, நன்னீர் சேமிப்பு. நான்கும் போற்றினால் நம் நிலம் தழைப்பு. நம்மால் ஆகும் முயற்சிகள் செய்வோம். நம் தலைமுறைகளை நலமாய் வாழவைப்போம். மனித உயிர் உயர்வோடு மற்ற உயிர்களையும் காப்போம். பூமி பந்து வெறும் மனிதர்க்கு மட்டுமல்ல. மற்ற அனைத்து உயிர்களுக்கும் சொந்தம், இந்த இயற்கையின் கட்டளையை மதித்து நடப்போம். வாழ்க மக்கள், வாழ்க மற்றுயிர், வாழ்க நானிலம், வாழ்க இயற்கை!