அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருக்கிடையேயான உச்சிமாநாடு பின்லாந்து தலைநகர் ஹெல்ஸின்கியில் இன்று நடக்கிறது. இந்த சந்திப்பு அதிகம் எதிர்பார்க்கப்படுவதற்கான காரணம் என்ன?
அமெரிக்காவும், ரஷ்யாவும் நீண்டகால எதிரிகளாக இருந்து வந்தாலும், கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு அவர்களுக்கிடையேயான பகைமையை இன்னமும் அதிகரித்தது.
அமெரிக்கா - ரஷ்யா என்னதான் பிரச்சனை?
இதன் தொடக்கத்தை அறிய வேண்டுமென்றால் 1945-1989ஆம் ஆண்டுகளுக்கிடையில் நடந்த பனிப்போருக்கு செல்ல வேண்டும்.
இவ்விரு நாடுகளும் நேரடியாக சண்டையிட்டதில்லை. சோவித் யூனியன் வீழ்ந்த பிறகு, மற்றும் உலகின் வல்லரசு நாடாக அமெரிக்கா எழுந்த பிறகும் கூட இந்த நாடுகளுக்கிடையேயான பகைமை குறைந்தபாடில்லை.
குறிப்பாக, கடந்த 2014ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனின் கிரிமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டது இருநாடுகளுக்கிடையேயான உறவை மேலும் மோசமடைய செய்தது. அதன் காரணமாக, அமெரிக்கா மற்றும் பல உலக நாடுகள் ரஷ்யா மீது தீவிரமான பொருளாதார தடைகளை விதித்தன.
இந்த சந்திப்பு ஏன் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது?
2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக ரஷ்யாவின் தலையீடு இருந்ததன் காரணமாகவே அவர் வெற்றிபெற்றார் என்ற கருத்து எழுந்ததால் டிரம்ப் - புதின் இடையிலான உறவு உலகளவில் கவனமுடன் ஆராயப்படுகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்யா தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருகிறது.
மேலும், அதிபர் தேர்தலின்போது ரஷ்யா செய்தது என்ன மற்றும் ரஷ்யாவுக்கும் டிரம்பின் தேர்தல் பிரசார குழுவுக்கும் தொடர்பேதாவது உள்ளதா என்பதை ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட ராபர்ட் முல்லர் தலைமையிலான குழுவின் விசாரணையை "சூனிய வேட்டை" என்று கூறி டிரம்ப் ரத்து செய்திருந்தார்.
தேர்தலில் தோல்வியுற்ற ஜனநாயக கட்சியினரின் கசப்புணர்வால் உந்தப்பட்ட பொய் குற்றச்சாட்டு இது என்று டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், தனது குடியரசு கட்சியின் பாரம்பரிய கொள்கைக்கு எதிராக ரஷ்யாவுடனான உறவை பலப்படுத்துவதற்கு முயற்சித்து வருகிறார்.
கிரிமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டதற்காக ஜி8 நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட ரஷ்யாவை மீண்டும் சேர்த்துகொள்ளும் முடிவுக்கு டிரம்ப் கடந்த மாதம் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இருவரும் ஒருவரைப்பற்றி ஒருவர் கூறியதென்ன?
புதினினை பாராட்டும் வகையிலான பல கருத்துகளை டிரம்ப் கூறியுள்ளார். குறிப்பாக புதினை சிறந்த தலைவர் என்றும், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமைவிட சிறந்த தலைவர் என்றும் கடந்த 2016ஆம் ஆண்டே டிரம்ப் கூறியிருந்தார்.
மேலும், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் சர்ச்சைக்கு மத்தியில் வெற்றிபெற்ற புதினுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டாமென்று தனது ஆலோசகர்கள் கூறியதையும் கேட்காமல், டிரம்ப் புதினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
ஆனால், டிரம்ப் குறித்து சில சமயங்களே பேசிய போதும் புதின் வார்த்தைகளை கவனமுடனே கையாண்டார். இருந்தபோதிலும், புதின் டிரம்பை "மிகவும் சாமர்த்தியமான மனிதர், புத்திசாலி" என்று பாராட்டியுள்ளார்.
உச்சிமாநாட்டில் எது குறித்தெல்லாம் பேசுவார்கள்?
ஆயுத குறைப்பு:
அதிகவிலான அணுஆயுதங்களை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் முதல் இரண்டு இடத்திலுள்ள அமெரிக்காவும், ரஷ்யாவும் 'நியூ ஸ்டார்ட்' என்ற ஒப்பந்தத்தின் மூலம் தங்களது அணுஆயுதங்களை குறைப்பதற்கும், கட்டுப்படுவதற்கும் ஒப்பு கொண்டுள்ளனர். அதுகுறித்து இந்த உச்சிமாநாட்டில் விவாதிக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா விதித்த தடைகள்:
ரஷ்யா உக்ரைனின் கிரிமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டபின் அந்நாட்டின் மீதும், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீதும் அமெரிக்கா விதித்த தடைகளை அகற்றுவது தொடர்பாகவும், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன்:
உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள ராணுவத்தை திரும்பப்பெற்றால் ரஷ்யா மிகவும் மகிழ்ச்சியடையும். இரு தலைவர்களும் சர்வதேச அமைதி காக்கும் படையினரை கிழக்கு உக்ரேனுக்குள் ரோந்து பணிக்காக அனுமதிக்க ஒப்புக்கொள்ளலாம். அங்கு நடந்த மோதல்களில் 10,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
சிரியா:
தனது கூட்டாளியான இஸ்ரேல் விரும்பும் வகையிலான மாற்றங்களை இரானிய குழுக்களின் கட்டுப்பாட்டிலுள்ள தென்மேற்கு சிரியாவில் மேற்கொள்வதற்குரிய விடயங்கள் குறித்து அமெரிக்கா ரஷ்யாவிடம் பேசலாம்.
டிரம்பின் கூட்டணி நாடுகள் கவலைப்படுவதற்கான காரணம் என்ன?
கடந்த வாரம் நடந்த நேட்டோ நாடுகளின் கூட்டத்தில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கண்டிக்கும் கூட்டு அறிக்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டிருந்தார்.
இந்நிலையில், தனது ஐரோப்பிய பயணத்தின்போது ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி மற்றும் பிரிட்டனின் தலைவர்களை விமர்சித்த டிரம்ப், ரஷ்யாவிடம் எவ்வாறு நடந்துகொள்வார் என்பது குறித்த கவலைகள் அந்நாடுகளிடையே எழுந்துள்ளன.
என்ன எதிர்பார்க்கலாம்?
இதுபோன்ற சந்திப்புகளின்போது எதிர்பார்ப்புகளை முறியடிக்கும் வகையிலேயே டிரம்பின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில், இரு தலைவர்களும் தங்களது மொழிபெயர்ப்பாளர்களை மட்டும் உடன் வைத்துக்கொண்டு தனியே பேசுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பல்லாண்டுகளாக நீடித்து வரும் இருநாடுகளிடையேயான மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த சந்திப்பு மற்ற உலக நாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா?
கண்டிப்பாக. சிரியா, உக்ரைன், கிரிமியா போன்ற உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்திய விவகாரங்களில் இவ்விரு நாடுகளும் எதிரெதிர் துருவத்தில் செயல்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பு பரவலான மாற்றங்களை அளிக்கக்கூடியதாகப் பார்க்கப்படுகிறது.
தங்கள் நாடு மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடைகள் "எல்லோருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது" என்று புதின் கூறியுள்ளார்.
உலகின் மற்ற நாடுகளைவிட ஐரோப்பிய நாடுகள் இந்த சந்திப்பை மிகவும் உன்னிப்பாக கவனிக்கும். ரஷ்ய அச்சுறுத்தலுக்கு அஞ்சும் ஐரோப்பிய நாடுகள், அதே சமயத்தில் ரஷ்ய எரிசக்தி விநியோகங்களை நம்பியிருக்கின்றன.
Post a Comment
Post a Comment