மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, முஸ்லிம் ஒருவர்,அரச அதிபராகின்றார்




இலங்கையில் 30 வருடங்களுக்குப் பிறகு மாவட்ட அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவரை, நியமிக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Image caption25 நிர்வாக மாவட்டங்களில் எந்தவொரு மாவட்டத்தின் கடந்த 30 வருடங்களில் முஸ்லிம் எவரும் அரசாங்க அதிபராக நியமிக்கப்படவில்லை.

இதன்படி, ஐ.எம். ஹனீபா என்பவரை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க செவ்வாய்கிழமை அனுமதி கிடைத்துள்ளது.
முஸ்லிம் சமூகத்திலிருந்து இலங்கையில் அரசாங்க அதிபர் பதவியை வகிக்கும் இரண்டாவது நபர் எனும் பெருமையை இதன்மூலம் ஹனீபா பெறுகிறார்.
முதலாவது அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட எம்.எம். மக்பூல், 1988ஆம் ஆண்டு ஆயுதக் குழுவினரால்சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐ.எம். ஹனீபாவை நியமிக்க தற்போது அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இலங்கையிலுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் எந்தவொரு மாவட்டத்திலும் கடந்த 30 வருடங்களில் முஸ்லிம் எவரும் அரசாங்க அதிபராக நியமிக்கப்படவில்லை.
இந்தப் பதவிக்கு தகுதியான பலர் முஸ்லிம் சமூகத்தில் இருந்தாலும், அவர்களை நியமிக்காமல் அரசாங்கம் அநீதி இழைத்து வருவதாக, ஆட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காலங்களில் வெளிப்படையாக குற்றஞ்சாட்டிவந்தனர்.
ஐ.எம். ஹனீபா சாய்ந்தமருது பிரதேச செயலாளராக பணியாற்றி வரும் நிலையில், தற்போது வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமனம் பெறுகிறார்.
அம்பாறை மாவட்டம் - சம்மாந்துறையை சேர்ந்த இவர், 1999ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவையில் பணிபுரியத் தேர்வானவர். இதற்கு முன்னர் இவர் ஆசிரியராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.