அதிகாரம் - ஊழல் இடையிலான தொடர்பை துண்டிக்க




எல்லை அற்ற அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரத்திற்கும் ஊழலுக்கும் இடையிலான தொடர்பை துண்டிப்பதற்கு கடந்த மூன்று வருட காலப்பகுதியில் இலங்கை பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்தார். 

ஜோர்ஜியாவின் திபிலிசி மாநாட்டு மண்டபத்தில் இன்று (18) ஆரம்பமான திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். 

திறந்த அரசாங்க பங்குடமையை உறுப்பு நாடுகளின் நலன்களுக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்ற கருப்பொருளின் கீழ் அங்குரார்ப்பண கூட்டத்தொடர் ஆரம்பமானது. 

அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி அங்கு உரையாற்றுகையில், நான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்படும் போது உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் எல்லை அற்ற அதிகாரம் இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடம் இருந்தது என்றும், தான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டு 06 மாதங்கள் நிறைவடைவதற்கு முன்னர் 19 வது அரசியல் அமைப்பு திருத்தத்தின் மூலம் அந்த எல்லை அற்ற அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்கி பாராளுமன்றத்தை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தார். 

மேலும் அன்று பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர் மற்றும் ஆணைக்குழு அதிகாரிகள், ஜனாதிபதியின் விருப்பின் பேரிலேயே நியமிக்கப்பட்டு வந்தனர். 

இன்று அந்த அனைத்து நடவடிக்கைகளும் பாராளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புச் சபையினூடாக மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

தான் நாட்டை பொறுப்பேற்கின்ற போது அரசியல் அதிகாரத்தின் காரணமாக நீதித்துறையும் பாரிய ஊழலுக்கு உள்ளாகியிருந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, நீதித்துறையின் சுயாதீனதன்மையை பாதுகாப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவித்தார். 

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உள்ளிட்ட அனைத்து ஆணைக்குழுக்களும் இன்று பலமான நிலையில் உள்ளதுடன், எவரும் தலையிட முடியாத வகையில் சுயாதீனமான, பக்கச்சார்பற்ற நிறுவனங்களாக அவை செயற்படுகின்றன என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

அரசியல்வாதிகளாக இருந்தாலும் அரசாங்க அதிகாரிகளாக இருந்தாலும் தன்னிடமுள்ள தனிப்பட்ட அதிகாரத்தை முடியுமானளவு குறைத்து அதிகாரத்தை யாப்பு ரீதியாக கூட்டாண்மையிடம் பொறுப்பளிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, கருத்தரங்குகள், செயலமர்வுகள் ஊடாக அது தொடர்பாக அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவூட்டவும் ஊழல் மோசடியை ஒழித்துக் கட்டுவது தொடர்பாக சிவில் சமூகத்திடம் உள்ள அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்தார். 

(ஜனாதிபதி ஊடக பிரிவு)