இஸ்லாமிய கீதங்களையும் பாடிய, இன்னிசைப் பாடகி ராணி காலமானார்




ஐதராபாத்:

1951-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ரூபவாஹினி திரைப்படத்தில் தனது எட்டாவது வயதில் பாட தொடங்கியவர் ராணி. பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஒடியா, சிங்களம், உஸ்பெக் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 500 திரையிசை பாடல்களை இவர் பாடியுள்ளார்.

தமிழில் தேவதாஸ், கல்யாணி, கல்யாணம் பண்ணி பார், மோகன சுந்தரம், தர்ம தேவதை, சிங்காரி, எம்.ஜி.ஆர். நடித்த ஜெனோவா, திரும்பி பார், சிவாஜி கணேசனும் எம்ஜிஆரும் இணைந்து நடித்த ஒரே படமான கூண்டுக்கிளி, நல்ல காலம், பணம் படுத்தும் பாடு, குணசுந்தரி, கதாநாயகி, காவேரி, முதல் தேதி, அமர கீதம், மர்ம வீரன், காலம் மாறி போச்சு, பாசவலை, படித்த பெண், அலாவுதீனும் அற்புத விளக்கும், எங்கள் வீட்டு மகாலட்சுமி, பானை பிடித்தவள் பாக்கியசாலி, லவகுசா உள்ளிட்ட பல படங்களில் இவர் கதாநாயகியர்களுக்காக குரல் கொடுத்துள்ளார்.

மேலும், இலங்கை நாட்டின் தேசிய கீதமும் இவரால் பாடப்பட்டதாகும். தனது கம்பீரக் குரலால் இஸ்லாமிய கீதங்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்பகட்ட பிரசார பாடல்களை பாடிய ‘இசைமுரசு’ நாகூர் ஹனீபாவுடன் இணைந்து சில பாடல்களை ராணி பாடியுள்ளார்.

குறிப்பாக, ஓதுவோம் வாருங்கள், தீனோரே நியாயமா?, வாழ வாழ நல்ல வழிகள் உண்டு உள்ளிட்ட இஸ்லாமிய பாடல்கள் மற்றும் வாழ்க திராவிட நாடு, அன்னை மொழி காத்து நிற்கும் அண்ணா வாழ்கவே உள்ளிட்ட தி.மு.க. கொள்கை பாடல்களும் ராணியின் குரலில் ஒலிப்பதிவாகி உள்ளன.

1965-ம் ஆண்டுக்கு பின்னர் வாய்ப்புகள் குறைந்ததால் திரைப்படங்களில் பாடாமல் இருந்த ராணி பல்வேறு இசை கச்சேரிகளை நடத்தி வந்தார். குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன், முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் முன்னிலையில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவரது குரலில் மகிழ்ந்த  பெருந்தலைவர் காமராஜர் 'இன்னிசை ராணி’ என்று பட்டமளித்து கவுரவித்தார்.


சமீபகாலமாக உடல்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பாடகி ராணி, நேற்றிரவு தனது 75-ம் வயதில் ஐதராபாத் நகரில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகம் மற்றும் இசைத்துறையை சேர்ந்த பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #playbacksingerRani  #Ranipassesaway