இலங்கையில் மரண தண்டனை - ஜனாதிபதிக்கு அறிக்கை




கொழும்பில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதரகங்களின் தலைமை அதிகாரிகள், கனடா உயர்ஸ்தானிகர் மற்றும் நோர்வே வதிவிட தூதுவர் ஆகியோரின் உடன்பாட்டுக்கு இணங்க பின்வரும் அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிடப்பட்டுள்ளது. 

சுமார் 40 வருட காலமாக இலங்கையில் இடைநிறுத்தப்பட்டுள்ள மரண தண்டனையை மீள நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்த கருத்துத் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெளிவுபடுத்தல் ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் நோர்வே ஆகியவறின் உயர்ஸ்தானிகராலயங்கள் எழுத்து மூலம் கோரியுள்ளன. 

இந்த கடிதத்தில் தாம் சகல விதமான குற்றங்களுக்கும், எவ்வேளையிலும் மரண தண்டனை வழங்கப்படுவதை கடுமையாக எதிர்ப்பை கொண்டுள்ளதாக இந்த உயர்ஸ்தானிகராலயங்கள் தெரிவித்துள்ளன. 

மனித கௌரவத்துக்கு பொருத்தமற்றதாக மரண தண்டனை அமைந்துள்ளது. மீண்டும் குற்றம் ஏற்படுவதை தவிர்க்கக்கூடிய திறனை உறுதியாக கொண்டிராததுடன், தவறான தீர்ப்புகள் காரணமாக அநாவசியமாக உயிரிழப்புகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் வழங்கப்பட்ட தீர்ப்பில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அதை மீட்டுக் கொள்ள முடியாத நிலை காணப்படுவதையும் சுட்டிக் காட்டியுள்ளது. 

இதன் காரணமாக மரண தண்டனையை தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்ட நிலையில் பேணுமாறு இந்த உயர்ஸ்தானிகராலயங்கள் கோரியுள்ளதுடன், இலங்கையின் பாரம்பரியமான மரண தண்டனைக்கு எதிர்ப்பை பேணுமாறும் கோரியுள்ளன.