விஜயகலா தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபருக்கு அறிவுறுத்தல்




சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணைகளை நடத்தி உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்ட மா அதிபருக்கு, சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். 

சபாநாயகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றின் மூலம் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று (03) பாராளுமன்றம் கூடிய போது விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குறிய கருத்து தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. 

அத்துடன் பாராளுமன்றில் பெரும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டதுடன் அவரை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சபாநாயகரிடம் விடுக்கப்பட்டது. 

இது தொடர்பில் கருத்திற்கொண்ட சபாநாயகர், அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த கருத்தில் அரசியலமைப்பையே அல்லது தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தையே மீறும் விதமான கருத்துக்கள் ஏதாவது இருப்பின் அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு சட்ட மா அதிபரிற்கு அறிவுருத்தியுள்ளார்.