தும்பங்கேணி - பழுகாமம் சந்தியில் விபத்து,சிறுவன் பலி




மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி - பழுகாமம் சந்தியில் இன்று (02) காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். 

இன்று காலை 9 மணியளவில் தும்பங்கேணி - பழுகாமம் சந்தியில் டிப்பர் வாகனம்ச முச்சக்கர வண்டியுடன் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பலாச்சோலையில் இருந்து களுவாஞ்சிகுடிக்கு சென்ற முச்சக்கர வண்டியுடன், சம்மாந்துறையில் இருந்து கொக்கட்டிச்சோலைக்கு சென்ற டிப்பர் வாகனம் மோதி பின்னர் முச்சக்கர வண்டி பாதையில் இழுத்துச் செல்லப்பட்டதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். 

இதன்போது குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்தி இரண்டு வயது சிறுவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், சிறுவனின் தாயாரும் முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயமடைந்துள்ளதாகவும் வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்தவர்களும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இரண்டு வாகனங்களினதும் வேகமே குறித்த விபத்து காரணம் என தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

(மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்)