மரண தண்டனை பட்டியலில் முதல் பெயர் பெண்ணிளுடையது




போதைப் பொருள் குற்றத்திற்காக மரண தண்டனை தீர்ப்புக்குள்ளாகியுள்ளோரின் பட்டியலில் முதன்மை வகிப்பது பெண்களே என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.
நாம் நாட்டைப் பொறுப்பேற்கையில், இலங்கையில் போதைப் பொருட்களை சட்டவிரோதமாக கொண்டுவரும் கேந்திர நிலையமாக இருந்தது எனக் குறிப்பிட்ட அமைச்சர், இந்நிலையை மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன என்றும் தெரிவித்தார்.
பணத்திற்கு அடிமையாகி மற்றொரு பிள்ளையினதோ இளைஞரினதோ வாழ்க்கையை சீர்குலைப்பதற்கு போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு தம்மை உண்மையான பௌத்தனென்று சொல்லிக்கொள்வதில் பலனில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அரசாங்கத்தின் அனுசரணையுடனேயே பாதாள உலகக் கோஷ்டியினர் செயற்பட்டனர். எனினும் எவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் பாதாள உலக குழுவை முற்றாக ஒழிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
இரத்தினபுரி கஹவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது-,
கடந்த ஆட்சியின்போது பாதாள குழுச் செயற்பாடுகள் அரசாங்கத்தின் அனுசரணையுடனேயே இடம்பெற்றன. ஆனால் இந்த ஆட்சியில் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதுபோன்ற செயற்பாடுகளை நாம் ஒழித்து கட்டுவோம். சிலர் போலியான உறுதிப்பத்திரங்களை தயாரித்து ஏழை மக்களிடமிருந்து காணிகளை அபகரிக்கின்றனர்.இவர்கள் காணிகளை அபகரிக்கும் பாதாள குழுக்கள். சில இடங்களில் ஹோட்டல்களை கொள்ளையிடும் பாதாள குழுக்கள் உள்ளன. இவர்கள் யாருக்கும் புதிதாக ஹோட்டல்களை ஆரம்பிக்க விடுவதில்லை. அதேபோன்று இன்னும் சில இடங்களில் வாகனங்களை கொள்ளையிடும் பாதாள குழுக்கள் உள்ளன.இவற்றை நாம் ஒழித்து அப்பாவி மக்களுக்கு வாழ்வதற்கான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும்.
இந்நாட்டில் அதிகமாக போதைப் பொருட்களை கொண்டு செல்வது பெண்கள் என்பதை அறியும்போது நாம் கவலையடைய வேண்டியுள்ளது. சிறைச்சாலைக்கு போய் வந்தால் வாழ்க்கையே வேண்டாம் என்கின்ற நிலை உருவாகும். தற்போது மரண தண்டணையை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். அதற்கான பெயர் பட்டியலை எடுத்துப் பார்த்தால் அதில் முதலாவது பெயரே ஒரு பெண்ணுடையது என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
அரசாங்கம் என்ற வகையில் நாம் மக்களின் தேவைகளை நிறைவேற்ற கடமைபட்டுள்ளோம்.என்றாலும் சில அதிகாரிகளுக்கு தமது கடமையின்போது அரசியல் செய்வதனை நிறுத்த முடியாமல் போயுள்ளது. அரசாங்க சேவையென்பது ஐ.தே.க வோ அல்லது சு.கவோ அல்ல.
அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது கடமைகளுக்காக தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.