மஸ்கெலியா வைத்தியசாலையின் அவலநிலை




(க.கிஷாந்தன்)
நுவரெலியா மாவட்டத்தில் மத்திய மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் மஸ்கெலியா வைத்தியசாலையில் அண்மைகாலமாக நோயாளர்களுக்கு பயன்பெரும் செயல்பாடுகள் எதுவும் நடைபெறவி்லை என இப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாமல் நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதுடன், சிகிச்சைக்கென வந்தவர்களும், வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றவர்களும் 17.07.2018 அன்று மாலை வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனால் சிகிச்சை பெற்ற நோயாளர்கள் உட்பட வெளி நோயாளர்களும் சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டதோடு, மிக மோசமான நிலையில் இருந்த நோயளர்களை கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
மேலும், அதிகமான தூர பகுதியிலிருந்து வந்த நோயாளிகள் போக்குவரத்துக்கு பணம் இன்றி பசி, பட்னியுடன் வீடு சென்ற அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, வைத்தியசாலையில் ஐந்து வைத்தியர்கள் கடமையாற்ற வேண்டிய நிலையில் மூவர் மாத்திரமே பணியில் ஈடுப்பட்டனர். இதிலும், இருவர் தங்களின் சொந்த கற்றல் நடவடிக்கைக்கு ஒருவரும், மற்றுமொருவர் பிரசவ விடுமுறை எடுத்து சென்றுள்ளதாகவும், ஒரு வைத்தியரால் வைத்தியசாலை நடவடிக்கை முன்னெடுக்க முடியாத நிலையிலேயே குறித்த நோயாளர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இவ்வைத்தியசாலையில் 10 தாதிமார்கள் கடமையாற்ற வேண்டிய நிலையில் 7 பேர் மாத்திரமே கடமையாற்றுகின்றனர்.. இதில் ஆண் ஊழியர்கள் ஒருவர் கூட இல்லை. காவலாளி ஒருவர் இல்லாமையினால் கடந்த காலங்களில் பல்வேறுப்பட்ட பிரச்சினைகளும் நிகழ்ந்துள்ளது. வைத்தியசாலையில் லிகிதர் ஒருவர் இன்மையால் பணியாற்றும் உழியர்களின் தேவைகளை செய்துக் கொள்ள முடியாமல் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, சிவனொளிபாதமலை பருவ காலத்தில் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் இந்த வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சைக்காக வரவேண்டிய நிலை ஏற்படும். ஆனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கமுடியாத நிலையிலே இவ்வைத்தியசாலை காணப்படுகின்றது.
வைத்தியசாலையில் கட்டிடங்கள் மாத்திரமே கம்பீரமாக இருக்கின்ற அதேவேளை, உள்ளே ஒன்றும் இல்லை. சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கு ஏற்ப இவ்வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லை, சிற்றூழியர்கள் இல்லை, பாதை மிகவும் மோசமாக உள்ளது, இங்குள்ள மின் உயர்த்தி, கடந்த பல வருடமாக செயற்பாடத நிலையிலும் காணப்படுகின்றது.
இதன் காரணமாக மூன்று மாடி கொண்ட இந்த வைத்தியசாலையில் நோயாளர்களை கொண்டு செல்வதில் பாரிய சிரமங்களை வைத்தியர்கள் எதிர்நோக்கியுள்ளனர். எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை. இந்த வைத்தியசாலை கட்டிடத்தில் வசதிகள் இருந்தாலும் கூட வைத்தியர்களின் குறைபாடுகள் அதிகமாகவுள்ளது. அதேபோல இந்த பிரதேசத்தை பொருத்தமட்டில் இலட்சக்கனக்கான மக்கள் வாழ்கின்ற ஒரு பிரதேசம் ஆகும். நோயாளிகளை இங்கு கொண்டு வரும் போது நோயாளிகளுக்கான தகுந்த சிகிச்சையின்மை காரணமாக ஏனைய வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
20ற்கும் மேற்பட்ட தோட்டங்களை சேர்ந்த மக்களும், 4 கிராமங்களை சேர்ந்த மக்களும் குறித்த வைத்தியசாலையை பயனப்படுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது.


எனவே மத்திய மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உடனடியாக உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என வைத்தியர்கள் உட்பட பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.