அம்பாறை மாவட்டத்தில், காணி விசேட மத்தியஸ்த சபை




அம்பாறை மாவட்டத்தில், காணி விசேட மத்தியஸ்த சபை ஸ்தாபிக்கப்படவுள்ளதென, காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் தலைவர் பி. கைறுடீன், இன்று (08) தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் விவசாயத்துக்கு வழங்கப்பட்டு, பாரம்பரியமாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வந்த விவசாயக் காணிகள், யுத்த காலத்தின் பின்னர் வனப் பாதுகாப்பு, வன விலங்குப் பாதுகாப்பு, இராணுவ முகாம், புனித பூமி, ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்கென எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பொத்துவில், பாணாமை, தமண, திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில், கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களால் அபகரிக்கப்பட்டுள்ளன.
இதனால் குறித்த விவசாயிகள், பொருளாதார ரீதியாக பின் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் காணி மத்தியஸ்த சபை, மாவட்டத்துக்கு ஒரு காணி மத்தியஸ்த சபை என்ற அடிப்படையில், இம்மாவட்டத்தில் வாழும் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியதாக அமையுமெனவும் அவர் கூறினார்.
பிரதேசத்தில் காணப்படும் காணி சம்பந்தமான பிணக்குகளுக்குச் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கிடையில் சமரசத்தைக் கொண்டு வருவதே, காணி மத்தியஸ்த சபையின் பிரதான நோக்கமாகும்.