“சீனா, இலங்கையிடமிருந்து துறைமுகமொன்றைப் பெற்றுக்கொண்ட விதம்” எனும் தலைப்பில், அமெரிக்காவிலிருந்து வெளியாகும் தி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்த செய்தியூடாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், நேற்று (01) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
அத்துடன், பொறுப்பற்ற முறையில் செய்தியை வெளியிட்டு, தன்மீது சேறு பூசுவதற்கே முயற்சித்திருப்பதாகவும் இது, தனக்கு எதிரான அரசியல் சூழ்ச்சியென்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போதான பிரசார செலவுகளுக்காக, சீனாவின் சைனா ஹாபர் நிறுவனத்திடமிருந்து, மஹிந்த ராஜபக்ஷவுக்கு, 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டதாகவும் மேலும் சில விடயங்களை உள்ளடக்கியதாகவும், அந்தச் செய்தி வெளியாகியிருந்தது.
இது தொடர்பில், தனது அறிக்கையில் விளக்கமளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக, மேற்படி சைனா ஹாபர் நிறுவனம், கடந்த 2015ஆம் ஆண்டில், தனக்கு எத்தொகைப் பணத்தையும் வழங்கவில்லை என்றுக் குறிப்பிட்டிருந்தார்.
தன்னுடைய உதவியாளர்கள் மற்றும் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கே, அந்தப் பணம் வழங்கப்பட்டதாகவும் அதற்கான காசோலைகள், அலரி மாளிகைக்குக் கொண்டுவரப்பட்டு, தன்னிடம் வழங்கப்பட்டதாகவும், அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள மஹிந்த, அந்தப் பணத்தை யார் பெற்றுக்கொண்டார்கள் யாரிடம் கையளித்தார்கள் என்பது தொடர்பில், வேண்டுமென்றே தெளிவற்ற விதத்தில், அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதெனச் சுட்டிக்காட்டியதோடு, பொறுப்பற்ற முறையில், தன்மீது சேறு பூசுவதற்கே முயற்சித்திருப்பதாகவும் இது, தனக்கு எதிரான அரசியல் சூழ்ச்சியென்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்புத் துறைமுக வேலைத்திட்டத்தை, தாம் எதிர்பார்த்துள்ள மிகப் பிரதான வேலைத்திட்டமாகக் கருதுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தமையை நினைவுபடுத்தியுள்ள முன்னாள் ஜனாதிபதி, சைனா ஹாபர் நிறுவனம், தனது தேர்தல் பரப்புரைக்குப் பணம் செலவிட்டிருப்பின், அவர்களால் ஒருபோதும், துறைமுக நகரத் திட்டத்தை ஆரம்பிக்க முடியாதென்றும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ஹம்பாந்தோட்டை துறைமுகம், சீனாவுக்கு கிடைத்ததென்று கூறும் மேற்கத்தேய சக்திகளே, இன்று அந்தத் துறைமுகம் சீனாவுக்குக் கிடைக்கக் காரணமான இந்த தேசிய அரசாங்கத்தை, ஆட்சிக்குக் கொண்டுவர ஒத்துழைத்தனவெனக் குற்றஞ்சாட்டியுள்ள மஹிந்த ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தைக் குத்தகைக்கு எடுக்குமாறு, தற்போதைய அரசாங்கமே சீனாவிடம் கோரியதென்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவை நெருங்கிய நிலப்பரப்பொன்று, தற்போது சீனா வசமுள்ளதால், இந்தியா அமைதியிழந்து தவிப்பதாக, டைம்ஸ் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி, தன்னுடைய அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருப்பின், இவ்வாறானதொரு நிலைமை தோன்றியிருக்காதென்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடந்தேறிய சில விடயங்கள் காரணமாக, மஹிந்த ராஜபக்ஷ தான், இந்த நாட்டின் ஆட்சியாளராக மீண்டும் வரவேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே இந்தியா தற்போது உள்ளதென்றும், முன்னாள் ஜனாதிபதி, தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment