பெருந்தோட்ட கம்பனிகள் தோட்டப்பகுதிகளுக்கு முதலீடுகள் செய்யவில்லை




(க.கிஷாந்தன்)
தோட்டத் தொழிலாளர்களை நசுக்கும் பெருந்தோட்ட கம்பனிகள் தோட்டப்பகுதிகளுக்கு முதலீடுகள் செய்யவில்லை. இன்றைய சூழ்நிலையில் கம்பனிகளை தோட்டத்தை விட்டு செல்லுங்கள் என்றால். பெட்டி படுக்கையோடு செல்ல தயாராக உள்ளனர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், பொதுச்செயலாளருமான நுவரெலியா  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ சென். ஜோன்டிலரி தமிழ் வித்தியாலத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவும், வருடாந்த பரிசளிப்பு விழாவும் 16.07.2018 அன்று நடைபெற்றது

வித்தியாலயத்தின் அதிபர் கோடிஷ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான பிலிப்குமார், ஏ.பி.சக்திவேல், அட்டன் கல்வி வலயப்பணிப்பாளர் பி. ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்த புதிய கட்டிடத்தை ஆறுமுகன் தொண்டமான் திறந்து வைத்ததோடு, பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு  பரிசில்களும், பதக்கங்களையும் வழங்கி வைத்தார். இதன்போது கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த மூன்று தினங்களுக்கு முன் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட இந்தியா வெளிவிவகார செயலாளரை சந்தித்து மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன்.
இதில் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் மகளீர் விடுதி ஒன்றை அமைப்பது தொடர்பாகவும், நாவலப்பிட்டி கதிரேசன் பாடசாலை இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதால் இப்பாடசாலைக்கு எம்மால் பெறப்பட்டுள்ள ஐந்து ஏக்கர் காணியில் புதிய பாடசாலை கட்டிடங்களை அமைப்பது தொடர்பாகவும், மேலும் மலையக பாடசாலைகளின் அபிவிருத்திகள் தொடர்பாகவும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன் என தெரிவித்த இவர் மலையகத்தின் கல்வி முன்னேற்றம் கடந்த காலங்களை விட முன்னேற்றம் அடைந்துள்ளது. அந்த வகையில் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரி இம்முறை கல்வி வளர்ச்சியில் மூன்றாமிடத்தில் உள்ளது.  இதன் பெருமை அதிபர்கள் ஆசிரியர்களை சாரும்.
அதேவேளை நமது சமூக அபிவிருத்திற்கு தற்போது ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் போதாது மேலும் நிதி ஒதுக்கீடு செய்தாலும் நமது சமூகத்தின் அபிவிருத்திக்கு போதுமானதாக அமையாது. அந்தளவுக்கு நமது சமூகத்தின் அபிவிருத்திக்கு நிதி தேவைப்படுகின்றது.
இந்த நிலையில் நமது சமூகத்தின் எதிர்காலம் கல்வியின் முன்னேற்றத்தில் அமைந்துள்ளது.  பாடசாலைகளில் கல்வியின் அடித்தளத்தை இட்டு ஒய்வு பெற்றுள்ள கடந்த கால அதிபர் ஆசிரியர்களின் சேவையை மதித்து தற்போது அதிபர்கள் ஆசிரியர்கள் ஒற்றுமையை கடைப்பிடித்து கல்வி சேவையை முன்னேற்றமடைய செய்யவேண்டும்.
அத்தோடு பெற்றோர்களும் சமூகத்தின் முன்னேற்றத்தை உணர்ந்து தமது பிள்ளைகளை முறையாக பாடசாலைகளுக்கு அனுப்புவதுடன் பெற்றோர்களும் ஆசிரியர்களுடன் ஒத்துழைத்து செயற்பட வேண்டும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சமூகத்தின் தேவையை உணர்ந்து மாத்திரமே செயற்படும் பேதங்களை பார்க்காது. இந்திய வீடுகள் நான்காயிரம் கூட சமூகத்தின் தேவையுணர்ந்தே பெறப்பட்டது.
இந்தியாவிடம் வீடுகளையும் பெற்று ஒரு தோட்டத்துக்குறிய பிரிவுகளை இணைத்து நகரமாக்கும் வீடமைப்பு திட்டத்தை நடைமுறை படுத்தும் திட்டமே இ.தொ.கா விடம் இருந்தது ஆனால் இன்று தடாபுடாவாகிவிட்டது.
தோட்டங்களை அபிவிருத்தி செய்வது தேயிலை தொழிலை நவீனப்படுத்துவது என்ற அக்கறை பெருந்தன்மை தோட்டம் கம்பனிகளிடம் கிடையாது. மாறாக எந்தளவுக்கு தொழிலாளர்களை நசுக்கமுடியுமோ அந்தளவுக்கு நசுக்குகின்றனர்.
இந்த பெருந்தோட்ட கம்பனிகள் தோட்டங்களுக்கு முதலீடு செய்யவில்லை. தோட்டங்களை விட்டு செல்லுங்கள் என்றால் பெட்டியில் படுக்கையுடன் செல்லவே இவர்கள் தாயாராக உள்ளனர்.
தோட்டங்களில் தொழில் செய்வதற்கு ஆட்கள் குறைவு இளைஞர்கள் மாற்று தொழில் தேடி செல்கின்றனர். இதில் தவறேதும் கிடையாது. புதிய தொழிநுட்ப ரீதியில் தோட்டங்களின் தேயிலை தொழிலை முன்னெடுக்க இந்திய அரசாங்கத்திடம் வழியுறுத்தியுள்ளோம்.
இதற்கமைய இந்திய பிரதமரின் மலையக விஜயத்தின் போது அவர் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தேயிலையூடாக நவீன தொழிநுட்ப முறையில் செய்யப்படும் தளபாட தொழில் தொடர்பில் கூறினார்.


இதை நமது நாட்டிலும் மேற்கொள்ளும் வகையில் தொழிநுட்ப உதவியாளர் ஒருவரை எமக்கு தாருங்கள் என கேட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.