ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி




(க.கிஷாந்தன்)

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட தலவாக்கலை சுமன மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் குறித்த கல்லூரியில் நிலவும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி 10.07.2018 அன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலவாக்கலை சுமன மத்திய கல்லூரியின் முன்பாக சுலோகங்களை ஏந்தியவாறு பெற்றோர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுலோகங்களில் எங்கள் பாடசாலையில் ஆசிரியர்கள், அதிபர் இல்லை. உயர்தர வகுப்பிற்கான ஆசிரியர்கள் இல்லை. உடனடியாக ஆசிரியர்களை நியமியுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இது தொடர்பாக பெற்றோர்கள் கருத்துத் தெரிவிக்கையில்

நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட இந்த பாடசாலையில் பிள்ளைகளை படிப்பிதற்கு ஆசிரியர்கள் இல்லை. நீண்ட காலமாக அதிபரும், ஆசிரியர்களும் இல்லை. எல்லோருக்கும் கிடைக்கின்ற பொதுவான கல்வி எங்களுடைய பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. பல தடவைகள் நுவரெலியா மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் பாடசாலைக்கு குறைபாடு நிலவுகின்ற பாடத்திற்கான ஆசிரியர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்றனர்.