(க.கிஷாந்தன்)
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெசல்கமுவ ஓயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறான சென்.ஜோன்டிலரி பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் அட்டன் நீதிமன்றத்தின் பதில் நீதவான் ராமமூர்த்தி பார்வையிட்டதன் பின் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த சடலம் 09.07.2017 அன்று காலை 9 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு, நோர்வூட் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
குறித்த ஆற்றுப் பகுதியில் சடலமொன்று கிடப்பதாக அப்பகுதியில் உள்ள தேயிலை மலைக்கு வேலைக்கு சென்றவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்.
25 அல்லது 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதோடு, சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் அட்டன் பதில் நீதவான் அவ்விடத்திற்கு வருகை தந்த பின்னர் சடலம் நீரிலிருந்து எடுக்கப்பட்டது. இதன்பின்னர் பதில் நீதவானால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
மீட்கப்பட்ட சடலத்தில் பெண்ணின் வாய் மற்றும் கழுத்து பகுதி பெண் அணிந்திருந்த சல்வார் துப்பட்டாவினால் இறுக்கப்பட்டிருந்தது.
குறித்த சடலம் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இம் மரணம் தொடர்பாக நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment
Post a Comment