எந்த நம்பிக்கையும் இல்லை, வீணாக எங்களை தொல்லை செய்ய வேண்டாம்




கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்த்தன, அரவிந்த டி சில்வா மற்றும் ரொஷன் மஹானாம ஆகியோரை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஆலோசகர்களாக நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றின் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. 

குறிப்பிட்ட கடிதத்தில் ´மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணம் மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னோக்கிய பாதை´ என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த 13 ஆம் திகதி பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இலங்கையின் சிறந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் இருந்து சேவையை பெற்றுக்கொள்ள தேர்வுக்குழு அமைச்சிடம் பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனை, ஏனைய சுழல் பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்க வேண்டும் எனவும் ´இது எதிர்கால சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சிறந்த மட்டத்தை அடைவதற்கு உதவியாக இருக்கும்´ எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்நிலையில், முன்னாள் கிரிக்கட் வீரர்களில் ஒருவரான மஹேல ஜயவர்தன, தனது ட்விட்டரில் குறித்த கடிதம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். 

அதில் மஹேல ஜயவர்தன, ஓராண்டு தெரிவு குழுவிலும் 6 மாதங்கள் சிறப்பு ஆலோசனை குழுவிலும் பணியாற்றியுள்ளேன். அப்போது நான் அளித்த பரிந்துரைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், தமக்கு அந்த அமைப்பின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். 

இதனால், இனி மேலும் வீணாக எங்களை தொல்லை செய்ய வேண்டாம் எனவும் மஹேல ஜயவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.