தடை தாண்டுவாரா பிரதி அமைச்சர் காதர் மஸ்தான்




(முகம்மத் இக்பால், சாய்ந்தமருது)
வன்னி மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான காதர் மஸ்தான் அவர்களுக்கு மீள் குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் எந்தவித அதிகாரமும், மேலதிக நிதி ஒதுக்கீடுகளும் இல்லாமல் நீண்ட காலங்களாக மஸ்தான் எம்பி அவர்கள் பல அசௌகரீகங்களை எதிர்கொண்டு வந்தார்.
இவர் பரம்பரையில் ஓர் பணக்காரன் என்பதனால் தனது சொந்த பணத்தின் மூலமாகவே மக்களுக்கு பல சேவைகளை செய்து வந்தார். அதனால் மக்களினால் இவர் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டார்.
பணம் சம்பாதிப்பதுக்கென்றே அரசியலுக்கு வருகின்ற இன்றைய உலகில், சம்பாதித்த பணத்தினை கொண்டே மக்களுக்கு சேவை செய்வதென்பது அவூர்வம்தான்.
இயல்பாகவே மென்மை போக்கினைக்கொண்ட நல்ல மனிதர் என்று பெயர் பெற்றுள்ள இவரிடம், அரசியல்வாதிகளுக்குரிய பொய், ஏமாற்று, திருட்டுத்தனம் போன்ற எந்தவித கெட்ட குணமும் இவரிடமில்லை என்று கூறப்படுகின்றது.
1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் வலியினை இவர் நன்கு உணர்ந்தவராவார்.
இன்னும் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் விடுவிக்கப்படாத காணிகள் ஏராளம் உள்ளன. அத்தோடு வட மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் அவர்களது சொந்த இடங்களில் இன்னும் பூரணமாக மீள்குடியேற்றம் செய்யப்படாமலும் உள்ளார்கள்.
கடந்தகாலங்களில் வடமாகாணத்துக்கு மீள்குடியேற்றத்துக்கான முழு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தும் மக்களது எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவில்லை. அத்துடன் அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் பூரணமாக மீள்குடியேற்றம் செய்யப்படவுமில்லை.
இந்த நிலையிலேயே வன்னி மாவட்ட மக்களுக்கு பொருத்தமான மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு பிரதியமைச்சர் பதவி மஸ்தான் எம்பி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் குறுகிய காலத்துக்குள் வடக்கிலிருந்து அகதிகளாக்கப்பட்டு இன்னமும் மீள் குடியேற்றம் செய்யப்படாத முஸ்லிம் மக்களை மீள் குடியேற்றம் செய்வதுடன், விடுவிக்கப்படாத முஸ்லிம்களின் காணிகளை மீட்டெடுப்பதற்கான பாரிய பொறுப்பு பிரதியமைச்சர் மஸ்தான் மீது சுமத்தப்பட்டுள்ளது.
எனவே அந்த பொறுப்புக்களை செய்து முடிப்பாரா? அவ்வாறு செய்வதற்கு அரசியல் அதிகார ரீதியில் தடைகளை எதிர்கொள்ள மாட்டாரா? அல்லது வன்னி மாவட்டத்திலுள்ள ஏனைய அதிகார அரசியல்வாதிகள் ஒத்துழைப்பு வழங்குவார்களா? போன்றவைகள்தான் இன்றைய கேள்வியாகும்.
அவ்வாறு பல தடைகளையும் தாண்டி தனது பொறுப்புக்களை சரிவர செய்துமுடித்தால் வன்னி மாவட்ட மக்கள் மத்தியில் மட்டுமல்லாது, வடமாகான மக்களின் மனங்களில் நிலையான இடத்தினை மஸ்தான் எம்பி அவர்கள் பிடித்துக்கொள்வார் என்பதுதான் யதார்த்தமாகும்.