குழந்தைகளின் ஆபாசப்படங்கள் வைத்திருந்த குற்றத்திற்காக, வாட்டிகனின் முன்னாள் தூதருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மோசிங்னோர் கார்லோ அல்பர்டோ கபெல்லாவின் மொபைல் போனில் டஜன் கணக்கான ஆபாச புகைப்படம் மற்றும் கணொளிகள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பான வழக்கு, வாட்டிகன் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தநிலையில், தன் குற்றத்தை நீதிமன்றத்தில் கபெல்லா ஒப்புக்கொண்டார்.
வாஷிங்டனில் உள்ள வாட்டிகன் தூதரகத்தில் பணியாற்றியபோது, தனிப்பட்ட நெருக்கடிக்குத் தான் உள்ளானதாக அவர் கூறியுள்ளார்.
கபெல்லா மீது தங்களுக்கு உள்ள சந்தேகங்களை வாட்டிகனுக்கு அதிகாரிகள் தெரிவித்த பின்னர், கடந்த ஆண்டு அமெரிக்காவில் இருந்து அவர் திரும்ப அழைக்கப்பட்டார்.
கபெல்லா, அமெரிக்காவில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதற்காக, அவர் மீதான தூதர விதிவிலக்குகளை நீக்க வேண்டும் என அமெரிக்கா கோரியது.
இந்நிலையில், முன்னாள் தூதரான கபெல்லா, வாட்டிகனில் உள்ள சிறிய சிறையில் தனது தண்டனையை அனுபவிக்க உள்ளார். அத்துடன் 5,800 டாலர் அபராதமும் செலுத்த உள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் மருகுருக்கள் மீதான குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளில், இது சமீபத்திய குற்றச்சாட்டு ஆகும்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அதை மறைத்தது தொடர்பான குற்றச்சாட்டில், கடந்த மே மாதம் சிலி நாட்டில் உள்ள 34 ஆயர்களும் பதவி விலக முன்வந்தனர். அவர்களில் மூவரின் பதவி விலகலை போப் பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டார்.
அத்துடன், 1970களில் குழந்தைகளுக்கு எதிராக நடந்த பாலியல் துஷ்பிரயோகங்களை மறைத்ததாக பிலிப் வில்சன் எனும் பேராயருக்கு கடந்த மே மாதம் ஆஸ்திரேலியா தண்டனை வழங்கியது. இதையடுத்து அவர் தனது கடமைகளில் இருந்து விலகி நின்றார். ஆனால், பதவி விலகவில்லை.
வாட்டிகன் பொருளாளர் கார்டினல் ஜார்ஜ் பெல் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஆஸ்திரேலியாவில் விசாரிக்கப்படவுள்ளன. இக்குற்றச்சாட்டுகளை அவர் மறுக்கிறார்.
Post a Comment
Post a Comment