இன்று பிறை பார்க்குமாறு கூறவில்லை




ஷவ்வால் மாத தலைப்பிறை காண்பது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து அறிந்து கொள்வதற்காக அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் தலைமைகளை தொடர்புகொள்ள முயற்சித்த போதும், அதன் உயரதிகாரிகள் எவரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. 

இதனையடுத்து ஜம்மியதுல் உலமாவின் ஊடகப் பிரிவு பேச்சாளர் ஒருவரை தொடர்பு கொண்டு வினவிய போது ஜம்மியதுல் உலமாவின் உயர்மட்ட உறுப்பினர்கள் தற்சமயம் நாட்டில் இல்லை என்று பதிலளித்தார். 

இதனையடுத்து அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தியின் அண்மைய ஜும்ஆ பிரசங்கத்தில் தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்து அவரிடம் வினவிய போது, பிறை விடயத்தில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஆகியன இணைந்தே தீர்மானம் எடுக்கும் என்று அவர் கூறினார். 

ரிஸ்வி முப்தி தனது ஜும்ஆ பிரசங்கத்தில் கூறியது பத்வாவே அன்றி இன்றைய தினம் பிறை பார்க்குமாறு யாருக்கும் அறிவிக்கவில்லை என்று அந்தப் பேச்சாளர் கூறினார். 

நாளைய தினமே (15) ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறையை தீர்மானிக்கும் உத்தியோகபூர்வ மாநாடு இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறினார். 

இந்நிலையில் இன்று பிறை கண்டதாக யாராவது கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அறிவித்தால் அவரச கூட்டம் ஒன்றை கூட்டி அது தொடர்பில் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும் என்றும் ஜம்மியதுல் உலமாவின் ஊடகப் பேச்சாளர் கூறினார். 

எவ்வாறாயினும் இன்றைய தினம் (14) யாராவது பிறை கண்டால், அதுகுறித்து சாட்சிகளுடன் அறிவிக்கும் பட்சத்தில் நாளைய தினம் பெருநாள் தினமாக அறிவிக்கப்படும் என்று அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி அவரது இறுதி ஜும்ஆ பிரசங்கத்தின் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.