புதிதாகப் பொறுப்பேற்றுள்ள எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமது சனிக்கிழமை கலந்துகொண்ட பேரணியில் குண்டுவெடித்தது. இதில் பலர் கொல்லப்பட்டதாக அபி அகமது தெரிவித்துள்ளார்.
"எத்தியோப்பியா இணைந்திருப்பதை விரும்பாத சக்திகளின் தோல்விகரமான முயற்சி" என்று இந்தத் தாக்குதலை விமர்சித்துள்ளார் அபி. எத்தியோப்பியத் தலைநகரின் மெஸ்கெல் சதுக்கத்தில் ஆயிரக் கணக்கான மக்கள் பங்கேற்ற இந்தப் பேரணியில் வீசப்பட்ட கையெறி குண்டு வெடித்த உடனே அபி அங்கிருந்து உடனடியாக பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.
பல ஆண்டுகளாக நடந்துவந்த வன்முறைப் போராட்டங்களால் எத்தியோப்பியா சின்னாபின்னமானது. முந்தைய பிரதமர் ஹெய்லமரியம் டெசாலென் எதிர்பாராத விதமாக கடந்த பிப்ரவரியில் பதவி விலகியபிறகு அபி பிரதமரானார்.
மூன்றாண்டுகளாக நடந்து வந்த அரசு எதிர்ப்புப் போராட்டங்களில் முன்னிலையில் இருந்து வந்த ஒரோமோ மரபினக் குழுவில் இருந்து வந்த முதல் தலைவர் இவர். இந்தப் போராட்டங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தனர்.
நாட்டின் மிகப்பெரிய இனக்குழுவாக இருந்தபோதும் அரசியல், பொருளாதார, பண்பாட்டு ரீதியாக தாங்கள் ஓரங்கட்டப்படுவதாக கூறிய ஒரோமோ இனக்குழுவினர் இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அரசியல் வேறுபாடு உள்ளவர்களை கொடுமைப்படுத்தியது, சட்டத்துக்குப் புறம்பானவகையில் கொன்றது உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக எத்தியோப்பிய அரசு மீது குற்றம்சாட்டப்பட்டது.
ஆனால், தாம் பதவியேற்றது முதல் அரசின் இரும்புப் பிடியைத் தளர்த்தும் வகையிலான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார் அபி. முன்பு தடை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான இணைய தளங்களையும், தொலைக்காட்சி சேனல்கள்களையும் மீண்டும் இயங்க அனுமதித்ததும் இதில் அடக்கம்.
அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது ஓர் அரசு எதிர்ப்புக் குழு. அண்டை நாடான எரித்திரியாவில் இருந்து செயல்படும் 'ஜின்பாட் 7' என்ற அந்தக் குழு, உண்மையான ஜனநாயகம் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையை அபியின் சீர்திருத்தங்கள் தந்திருப்பதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
யார் இந்த அபி?
தன்னுடைய ஒரோமோ இனக்குழுவிலும், பிற இனக்குழுக்களிலும் உள்ள இளைஞர்களிடம் அபிக்கு செல்வாக்கு இருப்பதாகத் தெரிகிறது. ஒரோமோ மக்கள் ஜனநாயக அமைப்பின் தலைவர் இவர். இதைப் போன்ற நான்கு இனக்குழு கட்சிகள் ஒன்று சேர்ந்து எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி என்ற பெயரில் இயங்கும் ஆளும் கூட்டணியை உருவாக்கியுள்ளன.
42 வயதாகும் அபி, ஆகரோ நகரில் கிறிஸ்துவ- முஸ்லிம் கலப்புக் குடும்பத்தில் பிறந்தவர். ராணுவத்தில் பணியாற்றிய இவர், தகவல் வலைப்பின்னல் மற்றும் பாதுகாப்பு முகமையினை உருவாக்கியவர். பிறகு இவர் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
Post a Comment
Post a Comment