ரஞ்சன் டி சில்வாவின் கொலைக்கு உளவு பார்த கைத்தொலைபேசி கண்டெடுப்பு




தெஹிவளை - கல்கிசை மாநகர சபையின் உறுப்பினரும் கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையுமான ரஞ்சன் டி சில்வாவின் கொலைக்கு உளவு பார்க்க பயன்படுத்திய கைத்தொலைபேசி றத்மலானை பிரதேசத்தில் உள்ள ஓடை ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

குற்றப் புலனாய்வு திணைக்கம் மற்றும் கடற்படை சுழியோடிகள் இணைந்து நடத்திய தேடுதலில் றத்மலானை புகையிரத நிலைய வீதி, சில்வெஸ்டர் ஓடையில் இருந்து அந்த கைத்தொலைபேசி கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த கொலைக்கு உளவு பார்த்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, அந்தத் தொலைபேசியை வீசுமாறு கூறி நண்பர் ஒருவரிடம் வழங்கியுள்ளமை தெரிவந்துள்ளது. 

அதன்படி அந்த நண்பரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்ட போது, அந்த கைத்தொலைபேசியை சில்வெஸ்டர் ஓடையில் வீசியதாக அவர் தெரிவித்துள்ளார். 

அதன்படி இன்று காலை நடத்தப்பட்ட தேடுதலில் அந்தக் கைத் தொலைபேசி கண்டெடுக்கப்பட்டுள்ளது.