நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு




எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கு ஜூலை மாதம் 25ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மனு இன்று (26) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மஹேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோவுக்கு சத்திரசிகிச்சை ஒன்று செய்யப்பட்டுள்ளதால், அது தொடர்பான வைத்திய அறிக்கை அவரது சட்டத்தரணியால் நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை ஜூலை மாதம் 25ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம் சாட்சியாளர்களை மன்றில் ஆஜராகுமாறு பணித்தார்.

கடந்த அரசாங்க காலத்தில், மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து கொள்வதற்கு ரக்னா லங்கா தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோவுக்கு 355 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்கியதாக எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் தவறு என்பதால் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ மீதும் ஊழல் குற்றச்சாட்டு சமத்தப்பட்டுள்ளதுடன், வழக்கை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ளது.