றெஜினா கொலையை கண்டித்து




பாடசாலை மாணவி றெஜினா கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் நீதி கிடைக்க வேண்டுமெனக் கோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். 

பல்கலைக்கத்தின் முன்னால் இன்று (28) காலை ஒன்று கூடிய மாணவர்கள் பல்கலைக்கழகம் முன்பாக பதாதைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழத்தில் இருந்து பேரணியாக பரமேஸ்வராச் சந்தியைச் சென்றடைந்தனர். அங்கு வீதியின் இருமருங்கிலும் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதேவேளை, இந்த போராட்டத்தின் போது, இலஞ்சம் வாங்குவதில் உள்ள ஆர்வம் குற்றங்களைத் தடுப்பதில் இல்லை. காவல்துறையா? கஞ்சா துறையா?, வளரும் பயிரை முளையிலே கிள்ளாதே, காவல்துறையே நித்திரையா? போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக பதாதைகளை கைகளில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தார்கள். 

அந்த ஆர்ப்பாட்டத்தின் போது, இந்தியாவில் இருந்து வரும் கேரள கஞ்சாவினை கடத்துவதற்கு பொலிஸாரும் துணை போகின்றார்களா என்றும் மாணவர்கள் கேள்வி எழுப்பினார்கள். 

பயங்கரவாத்தினை தடை செய்துவிட்டோம். ஆயுதக் கடத்தல்களை முறியடித்துவிட்டோம் எனக் கூறும் அரசாங்கம் ஏன் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் பின்நிற்கின்றது. 

போதைப் பொருட்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றது. போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், இவ்வாறான கொலை மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கையினையும் முன்னெடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். 

மேலும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறான துஷ்பிரயோகங்கள் மற்றும் கொலைச் சம்பவங்களுக்கு எதிராக கிளர்ந்தெழுவோம் என்றும், எதிர்காலங்களில் போதைப் பொருட்களை காரணம் காட்டி நடைபெறும் பாலியல் வன்புனர்வுக் குற்றங்கள் மற்றும் கொலைகளுக்கு எதிராக, மாணவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என்றும், வட மாகாணத்தில் நிலவும் போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

(யாழ். நிருபர்கள் சுமித்தி மற்றும் பிரதீபன்)