அமெரிக்க நீதிபதி்;பிரிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோரிடம் சேர்க்க வேண்டும்




அமெரிக்க எல்லையில் குடும்பத்திடம் இருந்து பிரிக்கப்பட்ட ஆவணங்கள் இல்லாத அகதி குழந்தைகளை 30 நாட்களுக்குள் குடும்பத்துடன் ஒன்று சேர்க்க வேண்டும் என ஒரு அமெரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளை 14 நாட்களுக்குள் அவர்களின் பெற்றோருடன் ஒன்று சேர்க்க வேண்டும் எனவும் கலிபோர்னியா நீதிபதி டானா சப்ரா கூறியுள்ளார்.
எல்லையில், பாதுகாப்பு அதிகாரிகளால் குழந்தைகள் பிரிக்கப்பட்டதால், பல பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளை கண்டுபிடிக்கவும், தொடர்புகொள்ளவும் இயலவில்லை என்பதால் அமெரிக்க சிவில் உரிமைகள் சங்கம் சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், போதிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்கா வரும் அகதிகளின் குடும்பங்களை பிரிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவினை 'கொடூரமானது மற்றும் சட்டவிரோதமானது' என கூறியுள்ள அமெரிக்காவின் 17 மாகாணங்கள், டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக மற்றொரு வழக்கு தொடர்ந்துள்ளன.
அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் அடைக்கலம் தேடி வரும் அகதிகளை அனுமதிக்க மறுக்கும், டிரம்பின் நிர்வாக நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நியூ ஜெர்சி, நியூ மெக்ஸிக்கோ, வட கரோலினா, ஓரிகன், மேரிலாண்ட், இல்லினாய்ஸ், கொலம்பியா உள்ளிட்ட 17 மாகாணங்கள் செவ்வாய்க்கிழமையன்று டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தன.
அகதிகளின் குடும்பங்கள் பிரிக்கப்படுவது தொடர்பான மாகாணங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முதல் வழக்கான இதில், மக்களின் புகலிடம் கேட்கும் உரிமையை அதிபரின் நிர்வாக உத்தரவு மறுப்பதாகக் கூறியுள்ளனர்.
அமெரிக்கபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
குடும்பங்களிடம் இருந்து குழந்தைகள் பிரிக்கப்படமாட்டார்கள் என என கடந்த வாரம் டிரம்ப் உறுதியளித்த போதிலும், டிரம்பின் இந்த உத்தரவில் ஏற்கனவே பிரிக்கப்பட்ட குடும்பங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என மாகாணங்கள் தாக்கல் செய்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆவணங்கள் இல்லாத குடியேறிகள், அமெரிக்காவுக்குச் சட்டவிரோதமாக நுழைய முயற்சி செய்வதன் மூலம் தங்களின் ''குழந்தைகளை ஆபத்தில் சிக்க வைக்க வேண்டாம்'' என பிரேசிலில் பேசிய அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் எச்சரித்துள்ளார்.
''நீங்கள் சட்டப்பூர்வமாக வரமுடியவில்லையென்றால், அமெரிக்காவுக்கு வர வேண்டாம்'' அமெரிக்கா வர திட்டமிடுபவர்களுக்கான எனது செய்தி இது எனவும் அவர் கூறினார்.
''போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் மனித கடத்தல்காரர்கள் மூலம் அமெரிக்காவுக்கு வர முயற்சி செய்து, நீங்களும், உங்கள் குழந்தைகளும் ஆபத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள்'' என்றார் அவர்.
ஆவணங்கள் இல்லாத குடியேறிகள் கைதுசெய்யப்படும்போது பெற்றோர் மற்றும் குழந்தைகள் தனித்தனி இடத்தில் வைக்கப்படுவது குறித்த டிரம்பின் கொள்கைக்கு முன்னதாக சர்வதேச ரீதியாக பலத்த எதிர்ப்பு எழுந்தது.
அமெரிக்க ஊடகங்களிடம் பேசிய அமெரிக்க சுகாதாரத்துறையின் அகதிகள் மீள்குடியேற்ற அலுவலகம், தற்போதுவரை பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்ட 2,047 குழந்தைகள் இருப்பதாகக் கூறியுள்ளது.
குழந்தைகள் மாற்றிக்கட்டப்பட்ட கிடங்குகளிலும், பாலைவன கூடாரங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.