ரிசெப் தயிப் எர்துவான், பெரும்பான்மையுடன் மீண்டும் அதிபராகிறார்




துருக்கி அதிபர் தேர்தலின், நீண்ட காலமாக துருக்கியின் தலைவராக இருக்கும் ரிசெப் தயிப் எர்துவான் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
"முழுமையான பெரும்பான்மையை அதிபர் ரிசெப் பெற்றுள்ளார்" என்று கூறிய தேர்தல் ஆணையத் தலைவர் சாதி குவென், வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை.
99% வாக்குகள் எண்ணப்பட்டதில், எர்துவான் 53 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாகவும், அவரது முக்கிய போட்டியாளரான முஹர்ரம் இன்ஸ் 31 சதவீத வாக்குளை பெற்றுள்ளதாகவும் அந்நாட்டு அரசு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
முடிவு என்னவாக இருந்தாலும், தனது ஜனநாயக போராட்டம் தொடரும் என்று எதிர்கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
அரசு ஊடகம் வெளியிட்ட தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருப்பதாக எதிர்கட்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில், இறுதி முடிவுகள் வரும் வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கப்படும்.

தனது ஏகே கட்சியின் ஆளும் கூட்டணியே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ளதாக ரிசெப் தெரிவித்துள்ளார்.
"ஜனநாயகம் குறித்து துருக்கி, இந்த உலகத்திற்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளதாகவும்" அவர் குறிப்பிட்டார்.
துருக்கியின் புதிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், புதிய குறிப்பிடத்தக்க அதிகாரங்கள் அதிபர் கைகளுக்கு செல்லும். இது இத்தேர்தல் முடிந்த பிறகு அமலுக்கு வரவுள்ளது.
ரிசெப் தயிப் எர்துவான்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இது ஜனநாயக ஆட்சியை பலவீனப்படுத்தும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
எண்ணப்பட்ட 96% வாக்குகளில், அதிபர் ரிசெப்பின் ஏ.கே கட்சி 42% வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்தில் முன்னிலையில் இருப்பதாக அரசு ஊடகமான அனடோலூ தெரிவிக்கிறது. முக்கிய எதிர்கட்சியான குடியரசு மக்கள் கட்சி 23% வாக்குகளை பெற்றுள்ளது.
" சுமார் 87% வாக்குப்பதிவு நடந்துள்ளது. கடந்த தேர்தலை விட இது அதிகம்" எனவும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
குடியரசு மக்கள் கட்சியின் மைய-இடது வேட்பாளரான இன்ஸ் தனது வீழ்ச்சியை செய்தியாளர் ஒருவரிடம் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இது உறுதி செய்யப்படவில்லை.
முன்னதாக, வாக்கு எண்ணிக்கைகளை மாற்றி வெளியிடுவதாக அரசு ஊடகத்தை குற்றஞ்சாட்டிய இன்ஸ், அதிகாரப்பூர்வ முடிவுகள் வந்த பிறகே தனது கருத்தை கூறப்போவதாக தெரிவித்தார்.
ரிசெப் தயிப் எர்துவான்
ஜூன் 2016 ஆம் ஆண்டு நடந்த தோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு பின்னர், அமல்படுத்தப்பட்ட அவரச நிலை இன்னும் துருக்கியில் உள்ளது. 2019-ல் நடக்க வேண்டிய தேர்தலை, முன்னமே நடத்த எர்துவான் முடிவு செய்ததால் தற்போது தேர்தல் நடந்தது.
முக்கிய தேர்தல் பிரச்சினைகள் என்ன?
முதல் பெரிய பிரச்சனை பொருளாதாரம். துருக்கியன் லிரா பெரும் வீழ்ச்சியை சந்தித்து, பணவீக்கம் 11 சதவீதமாக உள்ளது. சாதாரண மக்களை நசுக்குவதாக உள்ளது சூழல்.
தீவிரவாதம் ஒரு நீண்ட காலப் பிரச்சினை. குர்து போராளிகள் மற்றும் ஐ.எஸ் அமைப்பின் ஜிஹாதிக்கள் என பல தாக்குதல்களை துருக்கி எதிர்கொண்டு வருகிறது.
அடையாளப் பிரிவுகள் சார்ந்தே மக்கள் வாக்களிக்கின்றனர்.
குர்துக்கள் மற்றும் தேசியவாதிகள் இடையிலான பிளவு ஒரு புறம், மத மற்றும் மதசார்பற்ற மக்களுக்கு இடையேயான பிளவு மறுபுறம். இந்தப் பிளவுகளை ஒட்டியே மக்கள் வாக்களிப்பதாக கூறப்படுகிறது.