பள்ளிவாயலின் முன்பு பெண்கள் நடனமாடியதால், சுற்றுலா பயணிகளுக்கு தடை




மலேசியாவில் உள்ள ஒரு மசூதி முன்பு, இரண்டு பெண்கள் நடனமாடும் காணொளி சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து, அந்த மசூதியை சுற்றுலா பயணிகள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
போர்னியோ தீவில் உள்ள கோட்டா கினாபுவல் சிட்டி மசூதி முன்பு உள்ள சுவரின் மீது ஷார்ட்ஸ் அணிந்த இரண்டு பெண்கள் நடனமாடிய காணொளி சமூக வலைத்தளத்தில் பரவியது.
இவ்விருவரையும் கண்டுபிடிக்க அதிகாரிகள் முயன்று வருகிறனர். கிழக்கு ஆசியர்கள் போல தோன்றும் இவர்கள், வெளிநாட்டவர்கள் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இக்காணொளி ஃபேஸ்புக்கில் 2,70,000 முறை பார்க்கப்பட்டுள்ளது.
''எங்கள் மசூதியின் மீது அவர்களுக்கு போதிய மரியாதை இல்லாததை இது காட்டுகிறது'' என சபா மாநில சுற்றுலா அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
படத்தின் காப்புரிமைCOPYRIGHTSABA INFO
மசூதியின் வளாகத்திற்கு சுற்றுலா பயணிகளை அழைத்து கொண்டு வர பேருந்து, கார் போன்ற பொது போக்குவரத்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என மசூதியின் தலைவர் கூறியுள்ளார்.
மேலும், இதேபோன்ற சம்பவங்களைத் தடுக்க சுற்றுலா நிறுவனங்களுடன் பேச உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மலேசியாவில் மசூதிக்கு வரும் வெளிநாட்டவர்கள் அடக்கமான உடைகளை அணியுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
சபா மாநிலத்தில் சுற்றுலா பயணிகள் பிரச்சனைகளை எதிர்கொள்வது இது முதல்முறையல்ல.
கடந்த 2015-ம் ஆண்டு மலேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 16 பேர் இறந்ததற்கு, தங்கள் புனித மலையில் சுற்றுலா பயணிகள் நிர்வாணமாக போஸ் கொடுத்ததுதான் காரணம் என மலேசிய அதிகாரி கூறியிருந்தார்.