விக்கியின் நூலை வெளியிட்டு வைத்தார் சம்பந்தன்




வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனின் ‘நீதியரசர் பேசுகிறார்’ எனும் நூலை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் வெளியிட்டு வைத்துள்ளார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நூல் வெளியிட்டு விழாவில், முதலமைச்சரிடமிருந்து கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் வெளியிட்டு வைக்க, முதலமைச்சரின் சகோதரி நூலை பெற்றுக் கொண்டார்.

இதன்போது, முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், சம்மந்தனுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவித்தார்.



இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன் உட்பட பிரதம விருந்தினர்களுக்கு சிறப்பு பிரதிகள், நினைவுப் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், வடமாகாண எதிர்கட்சி தலைவர் சி. தவராசா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், ஈ.சரவவணபவன், த. சித்தார்த்தன், யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், வடமாகாண அமைச்சர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய முன்னணியின் செயலாளர் சிவராசா கஜேந்திரன், என். வித்தியாதரன் உள்ளிட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், சமய தலைவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டிருந்தனர்.



‘நீதியரசர் பேசுகிறார்’ – சம்பந்தனும் விக்கியும் ஒரே மேடையில்! (2ஆம் இணைப்பு)

வடக்கு அரசியல் விவகாரத்தில் எதிரும் புதிருமாய் பார்க்கப்படும், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் நீண்ட காலத்திற்குப் பின்னர் ஒரே மேடையில் தோன்றியுள்ளனர்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற நூல் வெளியீடடு விழா, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகின்றது. இந்நிகழ்வில் இருவரும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து உரையாடுவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான கேள்விகள் எழுந்துள்ள அதே சந்தர்ப்பத்தில், கூட்டமைப்புக்கு எதிராக முதலமைச்சர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில், இன்றைய நிகழ்வு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் இன்று இது தொடர்பில் பேசலாம் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.



எதிரும் புதிரும் இணையும் ஒரே மேடை!

வடக்கு அரசியல் விவகாரத்தில் எதிரும் புதிருமாய் பார்க்கப்படும், எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்பந்தனும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், ஒரே மேடையில் தோன்றவுள்ளனர்.



நீண்டகால இடைவெளிக்குப் பின்னர், இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொது நிகழ்வு ஒன்றில், ஒரே மேடையில் இருவரும் தோன்றவுள்ளதால் இதுகுறித்த எதிர்பார்ப்பு, மக்களின் மனதில் அதிகரித்துள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய, ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா, இன்று யாழ்ப்பாணத்தில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நூல் வெளியீட்டு விழாவிலேயே இருவரும் பங்ககேற்கவுள்ளனர். வடக்கு மாகாணசபையின் ஆயுள்காலம் முடிவடையவுள்ள நிலையிலும், அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான கேள்விகள் எழுந்துள்ள நிலையிலும், இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.