கிரிக்கெட் சூதாட்டக்காரர்களின் வருமானத்தை கவனியுங்கள்




இலங்கை கிரிக்கெட் அணி தோல்வியடையும் போட்டி இடம்பெறுகின்ற தினங்களில் இந்த நாட்டில் உள்ள ரேஸ்புகி மற்றும் ஆட்ட நிர்ணயம் செய்பவர்களின் வருமானத்தை சோதனை செய்ய வேண்டும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீரவிடம் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இன்று (27) உடுகம்பொல இரஜமஹா விகாரையில் இடம்பெற்ற விசேட பொசன் பௌர்ணமி தின விசேட சமய நிகழ்வின் பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

அமைச்சர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், ´நாங்கள் கிரிக்கெட் விளையாடும் காலங்களில் ஆட்டநிர்ணயம் என்பது இருக்கவில்லை. ஆனால் இன்று சூதாட்ட வியாபாரிகள் கிரிக்கெட் நிர்வாகத்திற்குள் வந்து கிரிக்கெட்டை சீரழித்துள்ளனர். 

மேலும் வெற்றி தோல்விக்கு மட்டுமல்லாது, யார் பந்து வீசுவது, யார் விக்கெட் எடுப்பது, எத்தனை ஓட்டங்களை குவிப்பது போன்ற எல்லா செயற்பாடுகளுக்கும் இன்று சூதாடட்டம் செய்கின்றனர். 

இந்த மாதிரி இழிவான செயல்களினால் கிரிக்கெட் விளையாட்டு கீழ் நிலைக்கு சென்றுவிட்டது. இதை நிறுத்த முடியாத நிலையில் நாம் உள்ளோம். இதற்கு காரணம் சூதாட்டத்துடன் சம்பந்தப்பட்டவர்களே கிரிக்கெட் நிர்வாகத்தில் உள்ளனர். இதன் பிரதிபலிப்பே நாம் கிரிக்கெட்டில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றோம். 

கிரிக்கெட்டில் எந்நேரத்திலும் தோல்வி ஏற்படலாம். இது சாதாரண விடயம். ஆனால் இன்று இலங்கை கிரிக்கெட் அணி தொடர் தோல்வியை சந்தித்து வருகின்றது. 

ஆனால் குறிப்பாக நாம் சிம்பாபே மற்றும் ஆப்கானிஸ்தான் அணியுடனான போட்டிகளில் தோல்வியை சந்தித்திருக்க வேண்டியதில்லை. ஆனால் நாம் தோல்வியடைந்தோம். நாம் பங்களதேஷ் அணியுடனான தோல்வியடைந்த விதம் சரியானதல்ல. 

ஏன் இந்த போட்டிகளில் தோல்வியடைந்தோம். இந்த போட்டிகள் இடம்பெற்ற காலங்களில் சூதாட்டக்காரர்களின் வருமானத்தை கவனிக்க வேண்டும். இன்று கிரிக்கெட் நிர்வாகத்தில் உள்ளவர்கள் உயர் மட்டத்தில் இருப்பதற்கு காரணம் அவர்கள் சூதாட்டம் மற்றும் புக்கி காரர்களுடன் தொடர்புவைத்திருப்பதாலேயே. 

இதனால் போட்டியில் தோல்வியும் ஆட்ட நிர்ணயமும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளதாக தென்படுகின்றது. இதன் காரணமாக நான் நிதியமைச்சர் மங்கள சமரவீரவிடம் முன்வைக்கும் கோரிக்கையானது ஆட்ட நிர்ணயம் செய்பவர்களின் வருமானத்தை சோதனை செய்ய வேண்டும் என்று. இது தொடர்பாக நாம் எழுத்து மூலமான கோரிக்கையை நிதியமைச்சுக்கு அனுப்பியுள்ளோம்´ என்றார் அமைச்சர்.