அம்பாறை, அட்டாளைச்சேனை, கோணவத்தை ஆற்றை மூடி, சட்டவிரோதமாக காணி சுவீகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தனி நபரொருவரின் நடவடிக்கை, பொதுமக்களின் ஒத்துழைப்புடன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்
ரீ.ஜே.அதிசயராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று (28) அவர் மேலும் தெரிவித்ததாவது,
“கோணவத்தை பாலத்துக்கு அருகில் சட்டவிரோதமாக ஆற்றுக்குள் கற்களையும்,
மண்ணையும் நிரப்பி, காணி சுவீகரிப்பு நடவடிக்கையில் நபரொருவர் ஈடுபட்டுக் கொண்டிருந்த
வேளை, பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில்
பொலிஸாரின் உதவியுடன் உடனடியாக சட்ட நடவடிக்கை
மேற்கொண்டு தடுத்து நிறுத்தப்பட்டது.
“இந்த ஆற்றங்கரையை அண்டிய பகுதிகளிலுள்ள நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்யும்
நடவடிக்கை அண்மைக் காலமாக மிக வேகமாக நடைபெற்று வருகின்றது.
“இதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, கிழக்கு மாகாண காணி ஆணையாளரால்
“இது அரச காணியாகும்; உள்நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது” என்ற வாசகம்
அடங்கிய பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
“எனினும், குறித்த எச்சரிக்கை பதாகையையும் பொருட்படுத்தாமல், காணி சுவீகரிப்பு
நடவடிக்கை இடம்பெற்றது. இதைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் மேற்கொண்ட முயற்சியின்
பலனாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்என்ற வகையில், உரிய பிரிவுக்கான கிராம
சேவை உத்தியோகத்தர், அக்கரைப்பற்று பொலிஸார் ஆகியோருக்கு அறிவித்து,
குறித்த காணி சுவீகரிப்மை உடன் தடுத்து நிறுத்தியதுடன், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட
நபரும் எச்சரிக்கப்பட்டார்.
“குறித்த ஆற்றில் சட்டவிரோதமாகப் போடப்பட்ட கற்களை ஓரிரு நாள்களுக்குள்
அகற்றுவதுடன், அதுவிடயமாக உரிய அதிகாரிகள் மீளவும் வருகை தந்து
பார்வையிடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதேவேளை, மீளவும் இவ்வாறான நடவடிக்கை இடம்பெறாமல் இருக்க
பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டியதுடன், ஒத்துழைப்பும் வழங்க வேண்டுமென,
பிரதேச செயலாளர், நீர்ப்பாசன அதிகாரிகள், பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Post a Comment
Post a Comment