இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி




மேற்கிந்திய தீவுகளுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 

நாணய சுழற்சியை வென்ற ​மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது. 

முதல் இன்னிங்சில் ​மேற்கிந்திய தீவுகள் அணி 69.3 ஓவர்களில் 204 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 

இலங்கை அணி சார்பில் லஹிரு 4 விக்கெட்டுக்களும் ராஜித 3 விக்கெட்டுக்களும் சுரங்க லக்மால் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

இதை அடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி 59 ஓவர்களில் 154 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 

​மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஹோல்டர் 4 விக்கெட்டுகளும், கெப்ரியல் 3 விக்கெட்டுகளும், ரோச் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதையடுத்து, ​மேற்கிந்திய தீவுகள் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. 

ஆனால் இலங்கை அணியினர் துல்லியமாக பந்து வீசி அசத்தினர். இதனால் முதலில் இருந்தே ​மேற்கிந்திய தீவுகள் அணி விக்கெட்டுகளை இழந்தது. 

இறுதியில் ​மேற்கிந்திய தீவுகள் அணி 31.2 ஓவர்களில் 93 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 

எனவே இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 144 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. 

இந்நிலையில், இலங்கை அணி 40.2 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தில்ருவான் பெரேரா 23(68), குசால் பெரேரா 28(43) ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிபெற செய்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ஹோல்டர் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

இதனால் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜேசன் ஹோல்டர் ஆட்ட நாயகன் விருதும், ஷேன் டவ்ரிச் தொடர் நாயகன் விருதும் வென்றனர்.