யாழில் 25 மாணவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு




யாழ். கொக்குவில் இந்து கல்லூரி மாணவர்கள் 25 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாடசாலை அதிபர் ஞானசம்பந்தர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

யாழ். பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவில் இன்று 13ம் திகதி இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். 

கடந்த வாரம் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதாக கூறி மாணவர்கள் போராட்டம் நடாத்தினார்கள். அந்த போராட்டத்தின் பின்னர் மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். 

மாணவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து மீண்டும் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்த 25 மாணவர்கள் மீதே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அந்த முறைப்பாட்டில், பாடசாலையின் ஒழுக்க நெறிகளை மீறி மாணவர்கள் செயற்படுவதாகவும், அவ்வாறு செயற்படும் அந்த 25 மாணவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அதிபர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். 

அந்த முறைப்பாட்டின் பிரகாரம், 25 மாணவர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். 

(யாழ் நிருபர் சுமித்தி)