2050 இல் இறக்குமதி பொருட்களை நிறுத்த தேவையான சட்டங்கள் தயாரிக்கப்படும்






சமகால நல்லாட்சி அரசாங்கம் தேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்துவதுடன் அவற்றை பாதுகாப்பதற்கு பாரிய வேலைத் திட்டங்களை முன்னெடுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய கைத்தொழிலை அழிப்பதாக சிலர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்த பிரதமர் தேசிய கைத்தொழில்துறையை பலப்படுத்தி சர்வதேச சந்தைக்கு தேசிய கைத்தொழில்துறையை முன்னெடுப்பதே நோக்கம் என்றும் கூறினார்.

அத்துடன் தேசிய கைத்தொழிலாளர்களுக்கு இயந்திரங்கள், உபகரணங்கள் இறக்குமதி செய்யும் போதும் அறவிடப்படும் வற் வரியை நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மில்லெனிய, பண்டாரகம என்ற இடத்தில் தனியார் பிஸ்கட் தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

புதிய கைத்தொழில் துறையை சார்ந்தோருக்கு வரி நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படும். அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வெளிநாட்டில் இருந்து இலங்கைக்குள் கொண்டு வரும்போதும் அதற்காக அறவிடப்படும் வற் வரியை நீக்குவதற்கும் தீர்மானித்துள்ளோம் என்றும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அபிவிருத்தி திட்டங்களுக்காக நிதி பெற்றுக்கொடுக்க கூடிய நிறுவனம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், நாம் இவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்திருக்கின்றோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

இத்துறையை மேம்படுத்துவதற்கு எத்தகைய நிவாரணங்களை, வசதிகளை பெற்றுக்கொடுக்கலாம் என்பது தொடர்பாகவும் நாம் கலந்துரையாடி வருகின்றோம். இதேபோன்று ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணங்கள் பெற்றுக் கொடுக்கின்றோம். அதேபோன்று கடனுக்கான வட்டி அறவீடுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க தேவையான பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றோம்.

தேசிய உற்பத்திகளின் ஒரு பகுதியை ஏற்றுமதி செய்வதற்கும் ஒரு பகுதியை உள்நாட்டு சந்தைக்கு வழங்கவும் நாம் நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.

2050 ஆம் ஆண்டாகும் போது நாட்டின் சனத்தொகை மேலும் அதிகரிக்கும். நாம் தூரநோக்குடன் சிந்தித்து எதிர்காலத்தை கருத்தில் கொண்டே செயற்படுகிறோம். அதிக இலாபத்தை நோக்காகக் கொண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நிறுத்தவும் தேவையான சட்டங்களை தயாரித்து வருகின்றோம் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறினார்.