தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவங்கள் மாறினால் இணைந்து செயற்படத் தயார்




தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவங்கள் மாறினால், குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் விலகினால், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். 

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர், தமிழ் கட்சிகள் இணைந்து செற்படுவது தொடர்பிலும், தேர்தல் காலங்களில் மக்களின் ஆணைகள் தொடர்பாகவும் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் விரக்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக முன்வைத்த கருத்துக்கள் அல்ல. கொள்கை ரீதியாக முன்வைத்த விமர்சனங்களாக அமைந்திருந்தன. 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் தொடர்பான விமர்சனங்களை முன்வைக்கின்ற போது, அவை கடுமையான விமர்சனங்கள் எனப் பொதுமக்கள் கருதியிருக்கலாம். ஒற்றையாட்சிக்கு இணங்குகின்ற சமஸ்டியை நிராகரிக்கின்ற வடகிழக்கு இணைப்பினை நிராகரிக்கின்ற பௌத்த சமயத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்ற நிலமையில் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சிக்கும் நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 

கடந்த செப்டெம்பர் மாதத்திற்குப் பிறகு அனைத்து விடயங்களும் நிரூபிக்கப்பட்ட நிலையில் தான், உள்ளுராட்சி தேர்தல் அமைந்துள்ளது. 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸிம் இணைந்து மிகப்பெரிய மாற்றத்திற்கு அடித்தளம் இட்டுள்ள இதே நிலையில், காலம் காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளோம். 

அந்தவகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் இனத்திற்கு துரோகம் இழைக்கும் வகையில் செயற்படுகின்றார்கள். எமது இனத்தின் அடிப்படை தேவைகளுக்கு மாறாக செயற்பட்டு வருகின்றார்கள். அந்த தலைமைத்துவத்தின் நிலைப்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு விளங்கப்படுத்தி நிராகரிப்பதற்கான செயற்பாட்டினை தான் முன்னெடுக்கின்றோம் என மிகத் தெளிவாக விளக்கியிருக்கின்றோம். 

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராகவோ, தமிழரசு கட்சிக்கு எதிராகவோ, அல்லது ஏனைய துணைக்கட்சிகளுக்கு எதிராகவோ செயற்படவில்லை. 

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற தலைமைத்துவம் தமிழ் மக்களை நடுத்தெருவிற்கு கொண்டுவந்து விட்டிருக்கின்ற நிலையில், அந்த தலைமைத்துவம் நீக்கப்பட்டு, நேர்மையான, தூய்மையான அரசியலை நடாத்தக் கூடிய உருவாக்கப்படும் பட்சத்தில் தமிழ் தேசிய பேரவையின் கொள்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையாக ஏற்றுக்கொண்டு, நேர்மையான அரசியலை நடத்தவும், ஊழல் மோசடிகளற்ற வெளிப்படைத்தன்மையுடன் இயங்கக் கூடிய, இந்த உள்ளுராட்சி சபைகளை நடாத்திக்கொண்டு இணங்கக் கூடிய தலைமைத்துவம் அது தமிழரசு கட்சியாக இருக்கலாம், அல்லது பங்காளிக்கட்சிகளாக இருக்கலாம். 

அவ்வாறு தலைமைத்துவம் உருவாக்கப்படுகின்ற போது, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றோம். 

ஆனால், அதுவரைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒருமித்த பாதையில் செல்ல முடியாது, ஏனெனில், அடிப்படையில் இருக்கின்ற கொள்கை வேறுபாடுகள். 

ஆனால், இன்றுள்ள யதார்த்தம். தமிழ் மக்கள் மிகத் தெளிவாக தமிழ் தேசியத்தோடு, இருக்கின்றார்கள் என்பதனை உறுதிப்படுத்தும் வகையில், அமைந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு துரோகம் இழைக்கும் வகையில் தான் செயற்பட்டு வந்துள்ளார்கள். 

தமிழ் தேசிய கூட்டமைப்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிடமும், தேசியத்தோடு இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றவர்களும், தூய்மையான அரசியல் கலாசாரத்தினை கட்டி எழுப்ப தயாராக இருக்கும் உறுப்பினர்கள் தமிழ் தேசிய பேரவையுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டுமென்று அறைகூவல் விடுத்துள்ளார். 

அவ்வாறு முன்வந்தால், நாமும் உங்களை அரவணைத்து ஒரு பலமான தமிழ் தேசிய நிலைப்பாடுகளை முன்னுக்கு கொண்டு செல்லக்கூடிய ஒரு தரப்பாக செயற்படத் தயாராக இருக்கின்றோம். எந்தவித உள்நோக்கமுமின்றி தமிழ் தேசியத்தினைக் காப்பாற்றுவதற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பு இடைக்கால அறிக்கைக்கு ஆணை கேட்டே, தேர்தலில் போட்டியிட்டார்கள். ஆனால் இன்றைய யதார்த்தம். கணிசமான மாற்றத்திற்கு தமிழ் தேசிய பேரவை போட்டிருந்தாலும் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் தொடர்ந்தும் ஒற்றையாட்சியை மக்கள் மத்தியில் திணிப்பதற்கு முயற்சிப்பார்கள் என்பதற்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது. 

தமிழ் மக்களை நடுத்தெருவிற்கு கொண்டுவந்து விட்ட கூட்டமைப்பின் பொறுப்பானவர்கள் அந்த அமைப்பில் இருந்து விலத்தப்பட்டதன் பிற்பாடு, அந்த அமைப்பில் உள்ள ஏனைய உறுப்பினர்களும், கட்சிகளும், சமஸ்டிக் கொள்கைக்கும், ஒற்றையாட்சியை நிராகரிப்பதற்கும், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்பதை நிராகரித்தும், சுயநிர்ணய உரிமையை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலும், தமிழ் தேசியத்தினை இறைமையை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வகையில், செயற்பட்டால், முழுமையாக ஏற்றுக்கொள்வோம். 

ஒற்றையாட்சியை உருவாக்கி, சமஸ்டி என்ற பொய்யை மக்கள் மத்தியில் பரப்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை இருக்கும் வரை இணைவதற்கு வாய்ப்புக்கள் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரு தலைமைத்துவம், இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் முழு கருத்துக்களையும், பங்காளி கட்சிகள் பொறுப்பேற்க வேண்டும். 

மூன்று கட்சிகளின் தலைமைத்துவமும் விலகிய பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் சிந்திக்க முடியும் என்றார். 

(யாழ் நிருபர் சுமித்தி)