ஜேக்கப் ஜுமா பதவி விலக மறுப்பு




வலுவான நெருக்கடி நீடித்து வரும் நிலையில், தென் ஆஃப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா, பதவி விலக மறுத்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் தென் ஆஃப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அவர் பதவி விலக வேண்டும் என்ற அழுத்தங்கள் அதிகரித்தன.
பேச்சுவார்த்தையின் விவரங்களை வெளியிடப்படவில்லை. ஆனால், திங்கட்கிழமையன்று கட்சித் தலைவர்கள் அவசரக்கூட்டத்தை கூட்ட உள்ளனர்.
ஜுமா பதவி விலக வேண்டும் என்று கூறியும், அவர் அதனை மறுத்துவிட்டதாக, ஆஃப்ரிக்க தேசிய காங்கிரசின் முன்னாள் உறுப்பினர் மற்றும் எதிர்கட்சி தலைவருமான ஜூலியஸ் மலேமா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஜேக்கப் ஜுமாவுக்கு பதில், சிரில் ராமபோசா ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக டிசம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அடுத்த வருட தேர்தலுக்கு முன்பு, ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை உடைக்கக்கூடிய அதிகாரப் போட்டியை தடுக்க கட்சியின் மூத்த தலைவர்கள் விரும்புவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஜுமாவை திரும்ப அழைப்பது அல்லது நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவது ஆகிய இரண்டு வழிகளில் ஒன்றின் மூலம் ஜுமாவை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அவரது கட்சியினர் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமையன்று, ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆட்சிமன்ற குழுவின் ஆறு முக்கிய மூத்த உறுப்பினர்கள், ஒருவர் பின் ஒருவராக ஜுமாவின் வீட்டுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சிரில் ராமபோசாபடத்தின் காப்புரிமைEPA
Image captionசிரில் ராமபோசா
ஜுமா பதவி விலக மறுத்துவிட்டார் என ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினரும், எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவருமான ஜூலியஸ் மலேமா ட்விட்டரில் கூறியுள்ளார்.
ஜுமாவின் இரண்டாம் ஆட்சி காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளாலும், நாட்டின் பொருளாதாரம் பலவீனமானதாலும் ஆஃப்ரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் புகழ் சரிந்தது. ஆனால், தன் மீது வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை ஜுமா மறுத்து வருகிறார்.
கட்சியின் புதிய தலைவரான சிரில் ராமபோசா, 2019 தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வலுவான நிலையில் உள்ளார். கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஒருவேளை ஜுமா பதவி விலக மறுத்தால், சிரில் ராமபோசா மற்றும் கட்சியில் உள்ள அவரது கூட்டாளிகள் ஜுமாவுக்கு எதிராகத் திரும்புவார்கள் என்ற அச்சம் அதிகரித்துள்ளது என செய்தியாளர்கள் கூறுகின்றனர்.