மஹிந்தவின் வெற்றி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் சிகப்பு எச்சரிக்கை






தேர்தல் வெற்றியின் மூலம் மஹிந்த மீண்டும் எழுந்து வந்துள்ளார். அவரது வெற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் விடுக்கப்பட்டுள்ள கடும் சிகப்பு எச்சரிக்கை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார். 

இன்று (12) காலை, கொழும்பு இந்து கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி ஸ்தாபகர் விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தேர்தல் வெற்றியின் மூலம் மஹிந்த மீண்டும் எழுந்து வந்துள்ளார். அவரது வெற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் விடுக்கப்பட்டுள்ள கடும் சிகப்பு எச்சரிக்கை. 2015 ஆம் ஆண்டு கிடைத்த மக்கள் ஆணையை புரிந்துக்கொண்டு நடைமுறைப்படுத்த தவறிவிட்டு, ஜனாதிபதியும், பிரதமரும் ஒருவருக்கு எதிராக இன்னொருவர் ஒரே அரசாங்கத்துக்கு உள்ளேயே கட்சி அரசியல் செய்ய முயன்றதன் பிரதி பலனே இதுவாகும். 

மஹிந்தவின் வாக்குகள், மஹிந்த ஆதரவு வாக்குகள் என்பதைவிட, இந்த அரசாங்கத்துக்கு எதிரான பெரும்பான்மை ஆட்சேபனை வாக்குகள் என்பதை இவர்கள் இருவரும் தெளிவாக புரிந்துக்கொள்ள முயல வேண்டும். 

அதேபோல் ஒரே நாட்டுக்குள் வாழும் தீர்மானத்துக்கு வந்துவிட்ட தமிழ் அரசியல் தலைவர்களும், மகிந்தவின் இன்றைய மீள்வருகையை கணக்கில் எடுக்க முன்வர வேண்டும். ஒன்றுமே நிகழாதது போல் நாம் இனியும் இருக்க முடியாது. தமிழர்கள் விரும்பினாலும். விரும்பாவிட்டாலும் கூட, இதுதான் பெரும்பான்மை சிங்கள மக்களின் இன்றைய தீர்ப்பு என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். 

இம்முறை மஹிந்த அணிக்கு வாக்களித்தவர்களில் பெரும்பாமையோர் சிங்கள பெளத்த வாக்காளர்களே. எனினும், 2009 ம் ஆண்டு விடுதலை புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியை தமிழ் மக்களுக்கும், பின் முஸ்லிம் மக்களுக்கும் எதிரான வெற்றியாக எண்ணி செயற்பட்டு, தமிழ் பேசும் மக்களை அந்நியப்படுத்திக்கொண்டதை போல், இந்த வெற்றியையும் சிங்கள பெளத்த எழுச்சி என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அணியினர் அர்த்தம் கொள்ள கூடாது. தனது வெற்றியை இலங்கை தேசிய வெற்றியாக கருதி, தமிழ் மக்களையும் அரவணைக்கும் புதிய கொள்கையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.