340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதற்காக நாடுபூராகவும் 13 ஆயிரத்து 374 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை தமது வாக்குகளை வாக்காளர்கள் பயன்படுத்தமுடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக 65 ஆயிரத்து 758 பொலிஸார் களமிறங்கவுள்ளனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமான இராணுவத்தினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
கிராமத்தின் ஆட்சியதிகாரத்தை தீர்மானிக்கின்ற குட்டித் தேர்தலாக இது இருந்தாலும் தேசியக் கட்சிகளுக்கு அனைத்து விதத்திலும் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக, கூட்டரசின் ஆயுள், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணியின் அடுத்தகட்டம், பொறுப்புக்கூறல், மாகாண சபைத் தேர்தல், அரசியல் ஸ்திரத்தன்மை, வெளிநாட்டு முதலீடுகள் என அனைத்தையும் தீர்மானிக்கும் தேர்தலாகவே இது பார்க்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யிலிருந்து வெளியேறி பொதுவேட்பாளராகக் களமிறங்கி ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன மீண்டும் சுதந்திரக் கட்சிக்குள் சென்று அதன் தலைமைப் பொறுப்பை ஏற்றபின்னர் சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும்.
எனவே, இதில் வெற்றிக்கனியை ருசித்து தனது பக்கமே மக்கள் நிற்கின்றனர் என்பதை மஹிந்த அணிக்கு காட்டவேண்டிய தேவைப்பாடு அவருக்கிருக்கின்றது. இதனால்தான் பிரசார மேடைகளில் கடும் காரசாரமாக ஜனாதிபதி மைத்திரி உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலவேளை, சுதந்திரக் கட்சியைவிட, மஹிந்த அணி கூடுதல் வாக்குகளைப் பெற்றால் அது மைத்திரி அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துவிடும். மைத்திரி பக்கம் உள்ளவர்கள் மஹிந்தவுடன் கைகோக்கக்கூடும். மாறாக, மஹிந்த அணி மண்கவ்வினால் கூட்டு எதிரணியிலுள்ள பலர் மைத்திரி பக்கம் குத்துக்கரணம் அடிப்பதற்குத் தயாராகவே இருக்கின்றனர்.
அதன்பின்னர் கூட்டு எதிரணி அரசியல் ரீதியாக அநாதையாகும் நிலைமை காணப்படுகின்றது. ஆகவே, இவ்விரு அணிகளுக்கும் பலத்தைக் காட்டவேண்டிய பலப்பரீட்சையாகவே இந்தத் தேர்தல் விளங்குகின்றது. அதேபோல் பிணைமுறி மோசடி தலையிடியால் திக்குமுக்காடிப் போயுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, குட்டித் தேர்தலில் தமக்கு மக்கள் ஆணை கிடைக்கும் என்றும், அதன்பின்னர் இந்தத் தலைவலி தீரும் என்றும் உறுதியாக நம்புகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிவாகை சூடுமானால் கூட்டரசின் ஆயுள் 2020 வரை நீடித்துச்செல்லும். அதுமட்டுமல்ல, ஐ.தே.க. மீதான மைத்திரி அணியின் வசைமழையும் ஓய்வுக்கு வரும்.
வாக்குவேட்டையில் ஐ.தே.கவுக்குப் பின்னடைவு ஏற்படும் பட்சத்தில் தெற்கு அரசியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்படக்கூடும். அது 2020இல் தனியாட்சி அமைக்கும் ஐ.தே.கவின் கனவை சூனியமாக்கக்கூடும் என்று அரசியல் நிபுணர்களால் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக மாற்றுக் கூட்டமைப்பொன்று அவசியம் என்ற தொனியில் வடக்கு, கிழக்கில் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தச் சவாலை முறியடித்து தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்கள்தான் என்பதை மீண்டும் நிரூபிக்கவேண்டிய கட்டாய சூழ்நிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது. மாறாக, மாற்றுக்கட்சிகள் வெற்றிநடைபோடும் பட்சத்தில் மத்திய அரசுடன் பேரம்பேசும் சக்தியிலும் அது தாக்கத்தை செலுத்திவிடக்கூடும்.
ஆகவே, தமிழ் மக்களுக்கும் இந்தத் தேர்தல் சகல வழிகளிலும் முக்கியத்துவம் பெற்றதாகவே பார்க்கப்படுகின்றது.
ஆகவே, தமிழ் மக்களுக்கும் இந்தத் தேர்தல் சகல வழிகளிலும் முக்கியத்துவம் பெற்றதாகவே பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மலையகத்தில் கடும் போட்டி நிலவுகின்றது. மலையக மக்கள் தமது பக்கமே நிற்கின்றனர் என்று இருதரப்பினரும் அறிவித்துவருகின்றனர். எனவே, மக்கள் எவர் பக்கம் என்பதை நாடிபிடித்துப் பார்க்கும் கருத்துக்கணிப்பாகவே இந்தக் குட்டித் தேர்தலை இவ்விரு கட்சிகளும் நோக்குகின்றன.
முஸ்லிம் மக்களின் ஏகோபித்த ஆதரவு தமக்கே இருக்கின்றது என்ற அந்தஸ்தை தக்கவைத்துக்கொள்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடுமையாகப் போராடி வருவதுடன், அந்த நிலைமையை மாற்றி தாமும் களத்தில் இருக்கின்றோம் என்றதொரு நிலையை ஏற்படுத்துவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸு ம் கடும் கங்கணத்துடன் செயற்பட்டுவருகின்றது.
தமது அரசியல் பயணத்துக்கு கிராம மக்களின் அங்கீகாரமுள்ளதா என்பதை இந்தத் தேர்தலில் அறிய ஜே.வி.பி. ஆர்வமாகவுள்ளது. இம்முறை சுயேச்சைக் குழுக்களும் மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தி வருவதைக் காணக்கூடியதாக இருந்தது.
340 சபைகளுக்கும் இரண்டு கட்டங்களாக வேட்புமனுக்கள் கோரப்பட்டிருந்தன. எல்லை நிர்ணயம் தொடர்பில் எழுந்த சர்ச்சையையடுத்தே இவ்வாறு இரண்டு கட்டங்களில் வேட்புமனுக்கள் கோரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தேர்தல் முறைமையின் கீழ் விருப்பு வாக்குமுறை ஒழிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு தொகுதிக்கு ஒருவர் தெரிவுசெய்யப்படவுள்ளதுடன், பெண்களுக்கும் 25 வீதம் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கட்சிகள் பெற்றுக்கொள்ளும் வாக்குகளின் பிரகாரம் விகிதாசார முறையின்கீழ் 40 வீதமும், தொகுதிவாரி முறையின்கீழ் 60 வீதமும் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 276 பிரதேச சபைகள், 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் காணப்படுகின்றன. பதிவுசெய்யப்பட்டவற்றில் 43 அரசியல் கட்சிகளும், 272 சுயேச்சைக் குழுக்களும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன.
போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக ஆண், பெண் உள்ளடங்கலாக 57,252 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் ஒரு கோடியே 57 இலட்சத்து 60 ஆயிரத்து 867 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment