மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு




(க.கிஷாந்தன்)
கலப்பு முறை தேர்தலான வட்டார மற்றும் தொகுதி அடிப்படையிலான தேர்தல் நடைபெறுகின்றது. புதிய தேர்தல் சட்டத்தின் படி உள்ளுர் அதிகார சபைகளை கிராம சேவகர்களின் பிரிவுகள் ஊடாக பிரிக்கப்பட்டு தொகுதி அடிப்படையிலும், வட்டார அடிப்படையிலும் இந்த தேர்தல் நடைபெறுகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் 5 பிரதேச செயலகங்களுக்குபட்ட உள்ளுர் அதிகார சபைகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் இந்த கலப்பு முறையிலான புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு நடைபெறுகின்றது.
306 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் இத் தேர்தலில் 2240 பேர் வேட்பாளர்களாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர். இவர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயட்சை குழுக்களை சார்ந்தவர்களாவர்.
நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்குமான 306 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இன்று காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவில் தோட்ட தொழிலாளர்கள், கிராம மற்றும் நகர்புற மக்கள் காலை வேளையிலேயே வாக்களிக்க ஆரம்பித்தனர்.
இன்று காலை ஆரம்பித்த வாக்களிப்பில் நுவரெலியா மாவட்டத்தில் 504 வாக்களிப்பு நிலையங்களிலும் மக்கள் சென்று வாக்களித்து வருகின்றனர்.
மலையகத்தில் பெருந்தோட்ட பகுதிகளில் சில தோட்டங்களில் தொழிலாளர்கள் தங்களது ஒரு நாள் வேலையை நிறுத்தியவாறு வாக்களிப்புகளில் பங்குகொள்ளும், அதேவேளை சில தோட்டங்களில் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று தேர்தல் ஆணையகத்தின் பிரகாரம் விடுமுறை பெற்று வாக்களிக்க சமூகமளித்துக் கொண்டிருப்பதை இங்கு காணக்கூடியதாக இருந்தது.
வாக்களிப்பு நிலையங்களுக்கருகில் பொலிஸ், இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வாக்களிப்பு வீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது.
இதுவரையில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.